Sunday, August 12, 2007

திராவிடன்?


இது வெட்டிப்பயல் வலைப்பதிவில் வெளியானது. என் மனதிலும் இந்த சந்தேகங்கள் இருந்தன. அதற்கான அருமையான விளக்கத்தை ஒரு நண்பர் அளித்திருக்கிறார். எனவே அதை இங்கே உங்களுக்காக பதிக்கிறேன்.

(source: http://vettipaiyal.blogspot.com)

1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?

திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கையை மறைப்பவர்கள் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே திராவிடர்களல்ல.தன்மதம் தான் உயர்ந்தது என்ற மூடநம்பிக்கை கொண்டிருப்பவன் தன்மதம் சார்ந்தவன் வேறொரு மதத்தை பின்பற்றினால் ஆத்திரமடைகிறான். இந்திய மதங்களைப் பின்பற்றி இந்தியக்கடவுளை வணங்கும் திராவிடர்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களிடத்திலும் வெறுப்பு இல்லை. எனவே மதமாற்றத்தில் கூட அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் மதங்களை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்தும் ஆரியர்களுக்கு ஆத்திரம் வருகிறது.ஆரிய அடிவருடிகள் என்ன செய்கிறார்கள்? பிற மதங்களைப் பழிப்பதையே முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மதத்தின் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தத் தவறுகள் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதால் அதை மறைக்க பிற மதங்களின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?

பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார். கடவுள் சிலைகளை அவமரியாதை செய்தார்.இது ஒரு உளவியல் செயல்பாடு. பெரியாரே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை நான் நம்பவில்லை. பின்னாளில் பெரியார் ரகசியமாக கடவுள் வழிபாடு செய்தார் என்று சிலர் சொல்வதில் கூட உண்மை இருக்கலாம். பெரியாரின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் காரணமும் விளங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர் பெரியார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தார். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம். இதை சாதிக்க சில புனித நம்பிக்கைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதுதான் செருப்பு மாலை உள்ளிட்ட ஷாக் டிரீட்மென்ட். அவரது நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால் பிற இந்(திய)து தமிழர்களுக்கு கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை உணர்ந்து கொண்டால் யார் பாதிக்கப்படுவார்களோ அந்த ஆரியர்களுக்குத்தான் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது.

3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?

காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் அவர் அரசியல் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். ஆடம்பரமும் சொல்லலங்காரமும் மிக்க அரசியல் சூழல் வளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ளாமல் அவர் உண்மையான மக்கள் சேவை மட்டும் போதும் என்று நினைத்ததால் தோல்விகண்டார்.

திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.

0 comments: