Saturday, December 22, 2007

ரீரீமிக்ஸ்...

இப்போ டிவில எல்லாரும் பழைய நடிகர்கள் புதிய பாடல்களுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சி அவங்களே ஆடி காட்டறாங்க. பார்க்க நகைச்சுவையாக இருக்கும். நான் நிஜமாவே பழைய நடிகர் ஒருத்தர் ஒரு லேட்டஸ்ட் பாட்டுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு ரீமிக்ஸ் செய்து பார்த்தேன். நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன். நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதுல 'உங்கள்' பாக்யராஜ் இப்போ வந்த விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்துல வர 'பொன்மகள் வந்தால்' ரீமிக்ஸ் பாட்டுக்கு ஆடி இருக்கார். மறக்காம ஸ்பீக்கர ஆன் பண்ணிட்டு பாருங்க. இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=eaN_GJZo6ck

Tuesday, December 18, 2007

விதி!

காலையில் காப்பீடு முகவர்(இன்சூரன்ஸ் ஏஜென்ட்) வந்து பேசிவிட்டு போனதில் இருந்து ராஜனுக்கு மனது என்னவோ போல் இருந்தது. அலுவலகத்தில் ஒழுங்காக வேலை கூட செய்ய முடியவில்லை அவனால். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

ராஜனுக்கு வயது ஐம்பது ஆகிறது. அவன் ஒவ்வொரு மாதமும் வாங்குற சம்பளத்தில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் போக அவனால் இதுவரை வேறு எதுவும் செய்ய முடிந்ததில்லை. அவனுக்கு பதினைந்து வயதில் ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிக்க வைத்து ஒரு டாக்டராக ஆக்க வேண்டும் என்பதே ராஜனுக்கும் அவனது மனைவிக்கும் கனவாக இருந்தது. அதற்காக தங்களுக்கென இவர்கள் எதுவும் செய்து கொண்டதே இல்லை. சினிமா, சுற்றுலா என இவர்கள் வெளியில் சென்று பல வருடங்கள் ஓடிவிட்டன. தங்கள் மகளை அவளது பள்ளியில் எங்காவது சுற்றுலா கூட்டி சென்றால் மறுக்காமல் அனுப்பி விடுவார்கள். இதனாலேயே ராஜன் காப்பீடு முகவர்கள் யார் அவனிடம் வந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான். இம்முறை நண்பர் ஒருவர் அனுப்பியதால் அவனால் மறுக்க முடியவில்லை. அவர் வந்து சென்ற பின் அந்த முகவர் கூறிய சில வார்த்தைகள் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

"என்ன சார் நீங்க. ஐம்பது வயசாகுது. இன்னும் ஒரு இன்சூரன்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்றீங்க. திடீல்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க மனைவி மகளை யார் காப்பாற்றுவார்கள்?" இதான் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

தன் மகளை விட தனது மனைவியைப் பற்றியே, அவன் முழு சிந்தனையும் இருந்தது. "எனக்காகவே வாழ்ந்து கிட்டு இருக்காளே? நான் இல்லைன்னா என்ன செய்வா? அவளுக்குன்னு நான் பெருசா ஒண்ணுமே பண்ணதில்லை. இருந்தாலும் எவ்வளவு அழகா குடும்பத்த நடத்துறா. எனக்கு என் உயிர் மீது ஆசை இல்லைன்னாலும், என் சீதாவுக்கு நான் தானே உயிர். அவளுக்கு ஒண்ணுமே செய்யாம நான் போயிட்டா அவ என்ன கஷ்டபடுவா? என்னை விட என் சீதாவ யார் நல்லா பார்த்துக்குவா? என்னால நெனச்சி கூட பார்க்க முடியலே!" இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே அவனது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அன்று மதியம் சாப்பிடக்கூட செல்லவில்லை ராஜன்.

ஒரு வழியாக அன்று வேலை முடிந்து தன் சக ஊழியர்களுடன் வீடு நோக்கி நடை போடுகிறான். அவனுக்குள் அந்த சிந்தனைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. "இத்தனை நாள் இல்லாமல் ஏன் நமக்கு திடீல் என்று இந்த பயம்? உடல் முதுமை அடைய அடைய மனம் தானாக தளர்ச்சி அடைகிறது என்பது உண்மை தான். என்னால் என் முதுமையை உணர முடிகிறது. அந்த முகவர் சொன்னது போல் ஏதாவது ஆகிவிட்டால்? இல்லை அதற்குள் கண்டிப்பாக என் சீதாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் இல்லைனா பாவம் அவ என்ன செய்வா? அவளுக்கு என்னையும் மகளையும் தவிர வேறு ஒண்ணுமே தெரியாதே. அவளுக்கு அம்மா அப்பா அல்லது கூட பிறந்தவர்கள் யாராச்சும் இருந்தாலும் பரவா இல்லை. அவளுக்கு உலகமே நாங்க இரண்டு பேரும் தானே. இப்போ தான் புரிகிறது எதற்கு அவள் அடிக்கடி எனக்கு முன்னால் சுமங்கலியாக சென்று விட வேண்டும் என்று கூறுவாள் என்று. வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அந்த முகவரிடம் பேச வேண்டும்" என்று நினைத்துக்கொண்டே வீட்டை அடைகிறான்.

வீட்டினுள்ளே அடி எடுத்து வைக்கும் நேரம் தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் சென்று எடுப்பதற்குள் அவனது மகள் ஓடி வந்து பேசுகிறாள். எதையோ கேட்டவள், திடீர் என்று தொலைபேசியை அப்படியே போட்டு விட்டு தன் தந்தை அருகில் நிற்பது சற்றும் தெரியாதவளாய் அழுதுகொண்டே அலறுகிறாள், "அம்மா! அப்பா ஆபீஸ்ல இருந்து வர வழில நெஞ்சு வலி வந்து சூர்யா ஹாஸ்பிடல்ல ICUல இருக்காராம் மா!"

(சின்னதா ஒரு நப்பாசை! அதான் சர்வேசன் போட்டிக்காக என் வாழ்கையில எழுதுன முதல் கதை!)

Monday, December 17, 2007

பில்லா 2007 திரைப்பட விமர்சனம்

பில்லா ரொம்ப சூப்பர் லா!

நடிகர்கள்: அஜித், நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான், ரோஸ் டான்

இயக்குனர்:
விஷ்ணுவர்தன்

இசை:
யுவன் ஷங்கர் ராஜா

கதை:
சலீம் கான், ஜாவேத் அக்தர்

எடிட்டிங்:
ஸ்ரீகர் பிரசாத்

ஒளிப்பதிவு:
நிரவ் ஷா

தயாரிப்பு: சுரேஷ்

பில்லா ரஜினி படத்தை அஜித்த வச்சு ரீமேக் செய்யறாங்கனு கேள்வி பட்ட உடனே இது சரி பட்டு வருமானு யோசிச்சேன். அப்புறம் பில்லா படங்களை(stills) பார்த்ததும் பரவா இல்லைன்னு தோணுச்சு. இப்போ படத்தை பார்த்ததுக்கப்புறம் இந்த படத்தை அஜித்தை தவிர வேறு யாரும் இவ்வளவு நல்லா செய்திருக்க முடியாதுன்னு தோணுது. (நான் ஷாருக்கான் நடித்த ஹிந்தி டான் ரீமேக் படமும் பார்த்திருக்கேன். ஆனா நான் தூங்கி வழிஞ்சிகிட்டு பார்த்த முதல் ஷாருக்கான் படம் இதான். இந்த ரோல் ஷாருக்கானுக்கு சுத்தமா பொருந்தவே இல்லை. இதை சல்மான்கான் இல்ல ஹ்ரித்திக் ரோஷன் பண்ணி இருந்தால் நல்லா இருந்திருக்கும்னு தோணுச்சு. இல்ல சஞ்சய்தத் மிகவும் பொருந்தி இருப்பார்.)

படத்துல என்னை ரொம்ப கவர்ந்தவை தல அஜித், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு. தலைய பார்த்த உடனே நான் மேர்சில் ஆயிட்டேன். சும்மா கலக்கலா இருக்காரு. செரியான ஸ்டைல் காட்டியிருக்கார்! வாலிக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி அஜித்த பார்க்க ரொம்ப நல்லா இருந்தது. அஜித் இதுல ஒரு கேரக்டர்ல அடிக்கடி புகை பிடிக்கிறார். அதை பார்த்த உடனே எனக்கு நம்ம ராமதாஸ் தான் ஞாபகம் வந்தாரு. அவர் கிட்ட இருந்து கூடிய சிக்கிரம் ஒரு அறிக்கை எதிர்பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேன். தலைக்கு கொஞ்சம் தொப்பை மட்டும் நல்லா தெரியுது. அத மட்டும் கொரச்சா இன்னும் நல்லா இருக்கும்.

பின்னணி இசைல யுவன் சும்மா பிச்சு ஒதரி இருக்காரு. படத்தை பார்த்து நான் பேஜார் ஆயிட்டேன். அதிலும் அந்த பில்லா தீம் மியூசிக்க அடிச்சிக்க முடியாது. இதை நீங்க திரை அரங்கில் பார்த்தால் தான் முழுவதுமாக அனுபவிக்க முடியும். அதே போல் ஒளிப்பதிவு. ரொம்ப நல்லா இருந்தது. ஒரு தமிழ் படம் பார்க்குற மாதிரியே இல்ல. படத்த பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் யார் ஒளிப்பதிவுன்னு வலைல தேடி பார்த்தா நிரவ் ஷாவாம். இவர் தான் தூம் 2, போக்கிரி படங்களின் ஒளிப்பதிவாளர். அதான்!

திரைஅரங்குல அஜித்க்கு இணையா நயன்தாராவுக்கும் விழில் பறக்குது. உடம்ப குறைத்து ரொம்ப ஸ்லிம்மா இருக்காங்க. படம் பூராவும் நடக்கறாங்க, நிக்கறாங்க இல்ல ஓடறாங்க. கொஞ்சம் கவர்ச்சியா நடிச்சி இருக்காங்க. மத்தபடி நயன்தாரா, நமீதா, சந்தானம் இவங்களுக்கு பெருசா ஒண்ணும் ரோலே இல்ல. படத்துல முக்கியமா வர்றது அஜித், பிரபு மற்றும் ரஹ்மான்.பிரபு எப்பவுமே ஹீரோவா நடிக்கரத விட இந்த மாதிரி சின்ன சின்ன வேஷத்துல தான் நல்லா அசத்துவாறு. உதாரணத்துக்கு அஞ்சலி படம். இதுலையும் ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு. இவரது குரல் சில இடத்துல நடிகர் திலகம் பேசுவது போலவே இருக்குது. இன்னும் சொல்ல போனால் விடுதலை படத்துல சிவாஜி பண்ணி இருப்பாரே அதே மாதிரி பண்ணி இருக்கார். தல இவர வச்சு சில காட்சிகள்ல காமெடி எல்லாம் பண்ணி இருக்கார். தலைக்கு இது போல காமெடி எல்லாம் வருமானு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. உண்மையிலேயே ரொம்ப நல்லா பண்ணி இருந்தார். இயக்குனருக்கு பாராட்டுக்கள்!

ரஹ்மானும் நல்லா நடிச்சிருக்கார். அவருக்கு இந்த போலீஸ் வேடம் நல்லா பொருந்துது. பழைய படத்தோட ரீமேக் என்பதால சில விஷயங்கள் லாஜிக்கலா இடிக்குது. ஆனா அதெல்லாம் பார்க்கப்பிடாது. படம் கண்டிப்பா நல்லா ஓடும். இன்னும் நிறைய பழைய படங்கள் ரீமேக் ஆகி வரும். அதுல நிறைய ரஜினி படமாத்தான் இருக்கும் (விஜய் முரட்டு காளை பண்ணுவார்னு நினைக்கிறேன்). மொத்தத்துல பில்லா கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். எனக்கே இன்னொரு வாட்டி பார்க்கணும் போல இருக்கு (நான் அஜித் விசிறி கிடையாது)!

Monday, December 3, 2007

என்சேன்டெட், ஆஜா நாச்லே திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: அமி அடம்ஸ் (Amy Adams), பாட்ரிக் தேம்ப்செய் (Patrick Dempsey), ஜேம்ஸ் மார்ஸ்டென் (James Marsden), திமோதி ஸ்பால் (Timothy Spall

இயக்குனர்: கெவின் லிமா (Kevin Lima)

தயாரிப்பு: வால்ட் டிஸ்நி பிக்சர்ஸ் (Walt Disney Pictures)

எனக்கு பேரி டேல் (Fairy Tale) கதைன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். அதான் இந்த படம் ரிலீஸ் ஆனவுடனே போய் பார்க்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா கதாநாயகிய போஸ்டர்ல பார்த்தா அவ்வளவா பிடிக்கல. (அது என்னவோ நாம எப்ப படத்துக்கு போனாலும் யார் நடிக்கிரான்னு கேட்டுட்டு தான் போவோம். யார் டைரக்டர்னு இப்போ தான் கொஞ்ச நாளா கேக்க ஆரமிச்சிருக்கோம்) இருந்தாலும் படத்துக்கு போனேன். ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு படம் ரொம்ப பிடிச்சதுக்கு காரணமே கதாநாயகியோட(Amy Adams) நடிப்பு தாங்க. கலக்கிட்டாங்க. ஒரு வெகுளித்தனமான, அப்பாவியான பெண்ணாக ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. சூப்பர்!

கதைல இவங்க பேரி டேல் உலகத்துல இருந்து நம்மளோட நிஜ உலகத்துக்கு வந்துடறாங்க. அப்புறம் என்ன நடக்குதுன்றது தான் கதை. படத்துல நல்ல காமெடி, காதல் மற்றும் பாட்டெல்லாம் இருக்கு. சில காட்சிகள்ல நம்ம இந்திய படம் பார்க்குற மாதிரி இருக்கும். ஆக மொத்தத்துல இது எல்லாரும் பார்க்க கூடிய ஒரு நல்ல பொழுது போக்கான படம். கண்டிப்பா பாருங்க!

நடிகர்கள்: மாதுரி தீக்ஷிட், அக்ஷய் கண்ணா, குனால் கபூர், கொன்கொனா சென் ஷர்மா, திவ்யா தட்டா, இர்பான் கான்

இயக்குனர்: அனில் மேத்தா

இசை: சலீம் சுலைமான்

தயாரிப்பு: ஆதித்ய சோப்ரா

இது மாதுரி தீக்ஷிட் சினிமாவில் மறுபிரவேசம் செய்திருக்கும் படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி இருக்கும் இப்படம் ஓரளவே வெற்றி கண்டுள்ளது.

கதைன்னு சொல்ல போனா பெருசா ஒண்ணும் இல்லீங்க. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மாதுரி தனது கிராமத்தில் தான் நடனம் பயின்ற அரங்கினை தன் குருநாதர் மறைவிற்கு பின் இடிக்க நினைப்பவர்களிடம் இருந்து அதை அழியாமல் காப்பாற்றுவதே கதை. இதுக்காக ஒரு பந்தயம் போட்டு அந்த கிராமத்துல இருக்கவங்கள வச்சே ஒரு நடன நிகழ்ச்சி நடத்தி காட்டுவாங்க மாதுரி. படத்தை பூராவும் அழகாக கிராமத்திலேயே எடுத்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். இப்பொழுதெல்லாம் ஹிந்தி படங்களை வெளிநாட்டில் தான் எடுக்கிறார்கள். அவ்வப்போது இப்படம் 'ஸ்வதேஸ்' மற்றும் 'லகான்' திரைப்படங்களை நினைவூட்டும்.


இப்படம் ஓடுவதற்கு முக்கிய காரணம் மாதுரி தான். அப்பா! என்ன ஒரு நடனம்? சும்மா பிச்சு ஒதரிட்டாங்க. இப்போ இருக்கும் இளம் வயது நாயகிகள் கூட இப்படி ஆட முடியாது. திருவிளையாடல் ஸ்டைல்ல 'டான்ஸுக்கு மதுரின்னு' சொல்ல வச்சுட்டாங்க! என்னை ரொம்ப கவர்ந்தது கொன்கொனா சென்னுடைய (Konkona Sen) நடிப்பு தான். வழக்கம் போல இந்த படத்துலயும் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டாங்க, நடிப்புல. நடன தேர்வுக்காக இவங்க ஒரு காட்சியில ஆடி கட்டுவாங்க பாருங்க.... சான்ஸே இல்ல! ஆட தெரியாத ஒருத்தர் எப்படி ஆடுவரோ அதே மாதிரி மிகவும் நேர்த்தியா பண்ணி இருப்பாங்க. அப்புறம் அக்ஷய் கண்ணா. இவரும் வழக்கம் போல மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும். இர்பான் கான் இதுல வெறும் நட்பிற்காக வந்து போகிறார், அதனால நடிக்க பெருசா வாய்ப்பில்லை. எனக்கு தெரிந்து ஹிந்தில நானா படேகர்க்கு(Nana Patekar) அடுத்து இவர்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம். நீங்க மதுரியோட விசிறியா இருந்தீங்கனா மட்டும் இந்த படத்தை பாருங்க! இல்லைன்னா உங்களுக்கு போர் அடிக்கும்!