காலையில் காப்பீடு முகவர்(இன்சூரன்ஸ் ஏஜென்ட்) வந்து பேசிவிட்டு போனதில் இருந்து ராஜனுக்கு மனது என்னவோ போல் இருந்தது. அலுவலகத்தில் ஒழுங்காக வேலை கூட செய்ய முடியவில்லை அவனால். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.
ராஜனுக்கு வயது ஐம்பது ஆகிறது. அவன் ஒவ்வொரு மாதமும் வாங்குற சம்பளத்தில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் போக அவனால் இதுவரை வேறு எதுவும் செய்ய முடிந்ததில்லை. அவனுக்கு பதினைந்து வயதில் ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிக்க வைத்து ஒரு டாக்டராக ஆக்க வேண்டும் என்பதே ராஜனுக்கும் அவனது மனைவிக்கும் கனவாக இருந்தது. அதற்காக தங்களுக்கென இவர்கள் எதுவும் செய்து கொண்டதே இல்லை. சினிமா, சுற்றுலா என இவர்கள் வெளியில் சென்று பல வருடங்கள் ஓடிவிட்டன. தங்கள் மகளை அவளது பள்ளியில் எங்காவது சுற்றுலா கூட்டி சென்றால் மறுக்காமல் அனுப்பி விடுவார்கள். இதனாலேயே ராஜன் காப்பீடு முகவர்கள் யார் அவனிடம் வந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான். இம்முறை நண்பர் ஒருவர் அனுப்பியதால் அவனால் மறுக்க முடியவில்லை. அவர் வந்து சென்ற பின் அந்த முகவர் கூறிய சில வார்த்தைகள் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
"என்ன சார் நீங்க. ஐம்பது வயசாகுது. இன்னும் ஒரு இன்சூரன்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்றீங்க. திடீல்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க மனைவி மகளை யார் காப்பாற்றுவார்கள்?" இதான் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.
தன் மகளை விட தனது மனைவியைப் பற்றியே, அவன் முழு சிந்தனையும் இருந்தது. "எனக்காகவே வாழ்ந்து கிட்டு இருக்காளே? நான் இல்லைன்னா என்ன செய்வா? அவளுக்குன்னு நான் பெருசா ஒண்ணுமே பண்ணதில்லை. இருந்தாலும் எவ்வளவு அழகா குடும்பத்த நடத்துறா. எனக்கு என் உயிர் மீது ஆசை இல்லைன்னாலும், என் சீதாவுக்கு நான் தானே உயிர். அவளுக்கு ஒண்ணுமே செய்யாம நான் போயிட்டா அவ என்ன கஷ்டபடுவா? என்னை விட என் சீதாவ யார் நல்லா பார்த்துக்குவா? என்னால நெனச்சி கூட பார்க்க முடியலே!" இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே அவனது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அன்று மதியம் சாப்பிடக்கூட செல்லவில்லை ராஜன்.
ஒரு வழியாக அன்று வேலை முடிந்து தன் சக ஊழியர்களுடன் வீடு நோக்கி நடை போடுகிறான். அவனுக்குள் அந்த சிந்தனைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. "இத்தனை நாள் இல்லாமல் ஏன் நமக்கு திடீல் என்று இந்த பயம்? உடல் முதுமை அடைய அடைய மனம் தானாக தளர்ச்சி அடைகிறது என்பது உண்மை தான். என்னால் என் முதுமையை உணர முடிகிறது. அந்த முகவர் சொன்னது போல் ஏதாவது ஆகிவிட்டால்? இல்லை அதற்குள் கண்டிப்பாக என் சீதாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் இல்லைனா பாவம் அவ என்ன செய்வா? அவளுக்கு என்னையும் மகளையும் தவிர வேறு ஒண்ணுமே தெரியாதே. அவளுக்கு அம்மா அப்பா அல்லது கூட பிறந்தவர்கள் யாராச்சும் இருந்தாலும் பரவா இல்லை. அவளுக்கு உலகமே நாங்க இரண்டு பேரும் தானே. இப்போ தான் புரிகிறது எதற்கு அவள் அடிக்கடி எனக்கு முன்னால் சுமங்கலியாக சென்று விட வேண்டும் என்று கூறுவாள் என்று. வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அந்த முகவரிடம் பேச வேண்டும்" என்று நினைத்துக்கொண்டே வீட்டை அடைகிறான்.
வீட்டினுள்ளே அடி எடுத்து வைக்கும் நேரம் தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் சென்று எடுப்பதற்குள் அவனது மகள் ஓடி வந்து பேசுகிறாள். எதையோ கேட்டவள், திடீர் என்று தொலைபேசியை அப்படியே போட்டு விட்டு தன் தந்தை அருகில் நிற்பது சற்றும் தெரியாதவளாய் அழுதுகொண்டே அலறுகிறாள், "அம்மா! அப்பா ஆபீஸ்ல இருந்து வர வழில நெஞ்சு வலி வந்து சூர்யா ஹாஸ்பிடல்ல ICUல இருக்காராம் மா!"
(சின்னதா ஒரு நப்பாசை! அதான் சர்வேசன் போட்டிக்காக என் வாழ்கையில எழுதுன முதல் கதை!)
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
4 comments:
அச்சச்சோ.
சோகமான நச்சா இருக்கே :(
நல்லாயிருக்கு... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.. :)
ரொம்ப நன்றீங்க இராம். நீங்க எழுதின ஒரு கதைய இப்போ தான் படிச்சேன். நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு;)
ஐய்யோ, எனக்கு புரியலேங்க. எனக்கு புரிய வெய்ங்க.
Post a Comment