Tuesday, March 25, 2008

கண்ணதாசன் காரைக்குடி...

இப்போ கொஞ்ச நாளா என் ipodல திரும்ப திரும்ப ஓடிகிட்டிருக்க பாட்டு இந்த அஞ்சாதே படத்துல வர கண்ணதாசன் காரைக்குடி பாட்டு தாங்க. இந்த பாட்ட கேக்கறத விட பார்க்கறதுக்கு இன்னும் ரொம்ப நல்லா இருக்கும். இந்த பாட்டுல வர நடன அசைவுகள் ரொம்ப நல்லா, புதுமையா, எளிமையா இருக்கும். டான்ஸ் ஆட தெரியாதவங்க இந்த பாட்ட பார்த்தா ரொம்ப சுளுவா ஆட கத்துக்கலாம். நரேன் ரொம்ப நல்லா ஆடி இருப்பார்.


இந்த படத்தின் நடன இயக்குனர்கள் பாபி, தினா. இதை ரொம்ப கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சேன். எங்கயும் இவங்க பேரை மட்டும் போடவே இல்லை. எனக்கு தெரிஞ்சி கானா பாட்டுக்கு இந்த அளவுக்கு அழகா நடனம் அமைச்சி இருக்கறது பிரபு தேவாவுக்கு அப்புறம் இவங்க தான். இந்த கீழ இருக்க மூணு பாட்டையும் ஒரு தடவை பாருங்க. கத்தாழ கண்ணால, கண்ணதாசன் காரைக்குடி, வாழ மீனு இந்த மூணு பாட்டுலையும் ஒரு ஒத்துமை இருக்கு. எளிமையான பாட்டு வரிகள், எளிமையான நடன அசைவுகள், எளிமையான இசை - இது மிஸ்கின் ஸ்டைலா இல்ல சுந்தர் சி பாபு ஸ்டைலானு தெரியல? கானா பாட்டுனா அதிரடி நடனம், அதிவேக இசை என்று இருந்த தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் மிஸ்கின் இல்ல இல்ல சுந்தர் சி பாபு. வாழ்த்துக்கள்!


அஞ்சாதே படத்துல சில தவறுகள் இருந்தாலும் படத்தை ரொம்ப நல்லா எடுத்து இருக்கார் மிஸ்கின். நரேன், பிரசன்னா நடிப்பு அற்புதம். படத்துல நிறைய எடத்துல வசனங்களுக்கு பதில் இசை மற்றும் ஒளிப்பதிவு மூலம் கதை சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பின்னணி இசை ரொம்ப கலக்கலா இருக்கு. படத்துல வர தீம் மியூசிக் எல்லாம் சூப்பர். மிஸ்கின் இவ்வளவு நல்லா பாடறதை கேக்க அச்சிரியமா இருக்கு. அச்சம் தவிர் டைட்டில் சாங் ரொம்ப நல்லா பாடி இருப்பார். அவர் தோற்றத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்ல.


சரி, டான்ஸ் கத்துக்கணும்னு ஆசை படரவங்க எல்லாம் கண்டிப்பா இந்த பாட்டை எல்லாம் பாருங்க. இதுல எனக்கு ரொம்ப புடிச்ச நடன அசைவு கண்ணதாசன் காரைக்குடி பாட்டுல நரேன் வலது கைய மேல தூக்கிட்டு இடது கைய கீழ இறகிட்டு கால்களை கொஞ்சம் வளைத்து கொண்டு முன்னாடி நாலு ஸ்டெப் பின்னாடி நாலு வைப்பாரே அதான். பாட்டு முடியும் போது கூட இதுல தான் முடியும். பாருங்க.
Saturday, March 22, 2008

குட்டீஸ் ஸ்பெஷல் - குங்குமம்...

இந்த வாரம்....ஜோதிகாவால் மட்டும் தான் நிமிஷத்துக்கு பத்து ரியாக்க்ஷன் காட்ட முடியுமா? குமுறுகிறார் இந்த கொழுக் மொழுக் குழந்தை ரோஹன்!
தனக்கு நடிக்கவும் தெரியும் என்று சொல்லும் இந்த பத்து மாத சுட்டி, சூப்பர் ஸ்டார் போலவும், சியான் விக்ரம் போலவும் நடித்தும் காண்பிக்கிறது...

**********
கண்ணத்தில் முத்தமிட்டால் குட்டீஸ் ரீமேக்...Wednesday, March 19, 2008

மார்க் ஆண்டனி - ரகுவரன்

நடிகர் ரகுவரன் காலமான செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்துச்சு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் எந்த ரோலில் நடித்தாலும் அந்த பாத்திரத்தில் ஒன்றி விடுவார். பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன் நடிகர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. கத்தியின்றி, ரத்தமின்றி, பெருசா சண்டையும் இன்றி வில்லனாக நடித்த இவர் ஒரு 'Trend Setter'.

பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷா எப்படி பிரபலமோ அந்த அளவுக்கு மார்க் ஆண்டனியும் பிரபலம். ரொம்ப நல்லா பண்ணியிருப்பார். ஆனா எனக்கு இவரு வில்லனா நடிச்சத விட குணசித்திர வேடங்களில் நடித்த படங்கள் தான் ரொம்ப பிடிக்கும்.

என் பொம்மகுட்டி அம்மாவுக்கு, சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, அஞ்சலி, முகவரி, ரோஜா கூட்டம், ரன் போன்ற பல படங்களில் இவர் குணசித்திர வேடங்களில் வாழ்ந்து காட்டியிருப்பார். அதிலும் ரன், முகவரி ஆகிய படங்களில் இவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இவர் சேர்ந்து நடிக்காத ஒரே நடிகர் கமல் என்று படித்தும் எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது. கமல் எப்பொழுதும் நல்ல நடிகர்களை தன் படங்களில் போடுவார், எப்படி இவர் மிஸ் ஆனார்னு புரியலை. நான் ஸ்கூல் படிக்கும் போது இருந்து இவர் நடிப்ப பார்த்திருக்கேன். ஆரம்பத்துல இவர எனக்கு புடிக்காது. ஒரே வில்லத்தனமான பாத்திரங்களா பண்ணிக்கிட்டு இருப்பாரு.

ஒரு தடவை தூர்தர்ஷன்ல ஒரு அமெரிக்க வாலிபரின் பேட்டி போட்டாங்க. வணக்கம் தமிழகம் மாதிரி ஒரு நிகழ்ச்சி அது. அப்ப கொஞ்சம் பிரபலமான வாலிபர் அவர், ஆனா இப்போ பேரு மறந்து போச்சு எனக்கு. இதுல விசேஷம் என்னன்னா அந்த அமெரிக்க வாலிபர் முழுக்க முழுக்க தமிழ்ல பேட்டி கொடுத்தார். திருக்குறள் எல்லாம் சொன்னார். மதுரை தமிழ் சங்கத்துல தமிழ் படிச்சாராம். கேக்கவே ரொம்ப பெருமையா இருந்துச்சு. அதுல அவர் கிட்ட அவருக்கு தமிழ்ல பிடிச்ச நடிகர் யாருன்னு கேட்டாங்க. நான் அவர் ரஜினி, கமல், சிவாஜி இப்படி யாரையாவது சொல்ல போறார்னு நெனச்சேன். ஆனா அவர் தனக்கு பிடித்த நடிகர் ரகுவரன்னு சொன்னாரு. அப்ப ரகுவரன் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. உடனே எல்லார் மனசுலயும் இருந்த கேள்விய அந்த வாலிபரை பார்த்து கேட்டாங்க, "ஏன் அவரை பிடிக்கும்?". உடனே அவர் ரகுவரனுடைய கண்கள் மிகவும் வலிமையானவை, அவர் பாடி லாங்குவேஜ் அசத்தலா இருக்கும், அவர் வசனம் பேசாமலேயே அவர் என்ன நினைக்கிறார்னு தன் கண்களாலேயே சொல்லிடுவார்னு ரகுவரனை பத்தி சொன்னாரு.

இதுக்கப்புறம் தான் ரகுவரனை பார்க்க ஆரமித்தேன். அந்த அமெரிக்க வாலிபர் ரகுவரனை பத்தி சொன்னது அவ்வளவும் உண்மைன்னு புரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் என் பொம்மகுட்டி அம்மாவுக்கு படம் பார்த்தடுக்கப்புறம் தான் அவரை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. அந்த படத்துல சத்யராஜ், சுஹாசினியை விட இவர் தான் மனசுல நின்னார். இந்த படம் வந்த போது எனக்கு பத்து வயசு. அந்த வயசுல இருந்தே இவரை எனக்கு பிடிக்கும்.

அப்புறம் இவர் சின்ன திரையில் வாழ்ந்து காட்டுன "இது ஒரு மனிதனின் கதை" யை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வருவது போலவே அவரது உண்மை வாழ்க்கையிலும் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. தனது இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

ரகுவரனுடைய விகி(wiki) பக்கம் இங்கே.

Monday, March 17, 2008

கேடி நம்பர் ஒன்

அய்யய்யோ மன்னிச்சிக்குங்க, நான் சொல்ல வந்தது கேடி நம்பர் ஒன் இல்ல ஜோடி நம்பர் ஒன். சின்ன திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ஒரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் எப்படி இருக்கும்னு நான் ஒரு சின்ன கற்பனை பண்ணி பார்த்தேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். நான் சொல்ற நிறைய விஷயம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்களுக்கு தான் புரியும்.

*****************

தொகுப்பாளர்: வெல்கம் பேக் டு தி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன் சீசன் இருபத்தி ஐந்தின், ஐம்பதாவது எபிசோட். இதுவரை இல்லாத அளவுக்கு இதில் இருபத்தி ஐந்து ஜோடிகள் இடம் பெற்றிருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. மொத்தம் நூத்தி ஐம்பது எபிசோட், மற்றும் பத்து ஒயில்ட் கார்டு ரவுண்டுகள் இடம்பெற உள்ளன.

***

தொகுப்பாளர்: போன வாரம் நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் நடந்த அடிதடியை முன்னிட்டு விஜய் டிவி முதல் முறையாக கனல் கண்ணன் மாஸ்டரை ஜோடி நம்பர் 1 ஸ்டண்ட் மாஸ்டரா நியமிச்சி இருக்கு. லெட் ஹஸ் வெல்கம் கனல் கண்ணன் மாஸ்டர் டு தி ஸ்டேஜ்.

***

தொகுப்பாளர்: மிஸ்டர் ஜட்ஜ் இன்னைக்கு நீங்க எங்க ஒக்கார போறீங்க?
ஜட்ஜ்: நான் எங்க ஒக்கார போறேன்னா?


ஒளிப்பதிவாளர்: சார், இந்த தடவை நீங்க என் பக்கத்துல ஒக்காருங்க சார். அப்ப தான் நீங்க பண்ற கொடுமையெல்லாம் சகிச்சு கிட்டு நான் எவ்வளவு பொறுமையா எப்படி கஷ்டப்பட்டு ஒளிப்பதிவு செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியும்.

***

தொகுப்பாளர்: இந்த ஐன்பதாவது எபிசோட பார்த்து எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணி இருப்பீங்க. நீங்க எல்லாரும் ஆவலோடு எதிர் பார்த்துகிட்டிருக்க அடுத்த வார எபிசோட்ல நம்ம ஜோடிகள் இந்த சீசன்ல முதல் முறையா நடனம் ஆட போறாங்க. சோ, மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க! மீட் யு ஆல் அகைன் இன் நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன், சீசன் 25.


***


தொகுப்பாளர்: லெட் ஹஸ் வெல்கம் ஹவர் ஸ்பெஷல் கெஸ்ட். சொல்லுங்க நீங்க இந்த நிகழ்ச்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க?


ஸ்பெஷல் ஜட்ஜ்: இது என்கு ரொம்ப புட்ச்ச நிகல்ச்சி. இதை நான் டெய்லி மறக்காம பார்ப்பேன். இதுல எல்லாரும் ரொம்ப நல்லா நடிக்கறாங்க. நான் இதுல ஒரு ஜட்ஜா வர வேண்டியது. பட் என்கு சரியா அல(ழ) வர்லேன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஆனா இப்போ ஸ்பெஷல் ஜட்ஜா வந்து இருக்குது ரொம்ப ஹாப்பி.


***

தொகுப்பாளர்: இன்னிக்கி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன்ல மாட்டு பொங்கல் ஸ்பெஷல். இதுக்காக ஸ்பெஷலா ரெண்டு டெல்லி எருமை, நாலு பசு மாட்ட ஸ்டேஜ்ல கட்டி போட்டுருக்கோம். நம்ம ஜோடிகள் எல்லாம் ரெண்டு குழுவா பிரிஞ்சி யார் நல்லா பாட்டு பாடிக்கிட்டே நிறைய பால் கரக்கறாங்கனு போட்டி போட போறாங்க. மக்கள் நாயகன் ராமராஜன் இதுக்கு ஸ்பெஷல் ஜட்ஜா வந்துருக்காரு. அவரு பால் கறக்கரத பத்தி நம்ம ஜோடிகளுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து இருக்காரு. சரி வாங்க நிகழ்ச்சிக்கு போவோம்.


***

தொகுப்பாளர்: போன வாரம் எழுந்து மேடைக்கு வந்த போது ஜோடிகள் அவரு கால்ல விழலைன்னு கோவிச்சுகிட்டு போன ஜட்ஜ நாங்க ஏர்போர்ட் வரைக்கும் போயி சமாதான பதுத்தி, ஏர்போர்ட்லேயே நம்ம ஜோடிகள் எல்லாம் டான்ஸ் ஆடி அத பார்க்க முடியாம ஏர்போர்ட் மேனேஜர் ஓடி வந்து ஜட்ஜ் கால்ல விழுந்து கேட்டு, ஒரு வழியா சமாளிச்சு அவர கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அதை பத்தி இப்போ ஒரு சின்ன ரிகாப் பார்ப்போம்.


***

தொகுப்பாளர்: ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி தன் ஜோடியோட சண்டை போட்டுக்கிட்டு வேற ஜோடி கூட்டிட்டு வந்து ஆடுறதால, இருபது வாரம் ஆகியும் இன்னும் ஒருத்தர் கூட எளிமினேட் ஆகல. அதனால இனிமேல் யாரும் தன் ஜோடிய மாத்த கூடாதுன்னு நம்ம ஜட்ஜ்ஸ் கெஞ்சி கேட்டுகிட்டிருக்காங்க.


***

தொகுப்பாளர்: இந்த வார ரியாலிட்டி ஷோல, முதல்ல நம்ம ஜோடி குப்புசாமி வழக்கமா பீடா வாங்குற கடையோட பீடா கடைக்காரர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?


பீடா கடைக்காரர்: அந்த புள்ள பீடா வாங்கி போடறத பார்க்கும் போதே அது ஒரு நல்ல டான்சரா வரும்னு எனக்கு தெரியும்.....ஏங்க, கொஞ்ச இந்த பக்கம் வாங்க, நான் பீடா போட்டு துப்பர எடத்துல நிக்கிறீங்க.


தொகுப்பாளர்: அய்யய்யோ, சாரிங்க. சரி இப்போ இங்க இருக்க பீடா கடைக்கரங்க எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன ஷோ பண்ண போறாங்க. அதுக்கு ஜட்ஜ் நம்ம ஜோடி குப்புசாமி.


***

தொகுப்பாளர்: விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன்னுக்கு சின்ன திரையில இருந்து யாருமே ஆட வராததால பொது மக்கள் நேர்முக தேர்வு நடந்துக்கிட்டுருக்கு. வாங்க போயி யார் கிட்டயாவது மொக்கையை போடுவோம். ஹலோ, உங்க பேர் என்ன?


தேர்வாளர்: என் பேர் ரவி காந்த்.


தொகுப்பாளர்: எப்படி இருக்கு இந்த அனுபவம் உங்களுக்கு?


தேர்வாளர்: என்னங்க இது. ரெண்டு நாளா வரிசைல நிக்கறேன். இன்னும் இரண்டு நாள் ஆகும்னு சொல்றாங்க. திருப்பதிக்கு கூட நான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணது கிடையாது. வெயிட் பண்ணிகிட்டிருக்கவங்க எல்லாம் அழறதுக்கு பயிற்சி பண்ணி பார்த்து கிட்டு இருக்காங்க. ஏதோ எழவு வீட்டுக்கு வந்துருக்கற மாதிரி இருக்குது எனக்கு.

தொகுப்பாளர்: சரி நீங்க எப்படி பயிற்சி பண்ணி இருக்கீங்க?

தேர்வாளர்: ஒரு வாரமா ஒக்காந்து எல்லா மெகா சீரியலையும் பார்த்தேன். இப்போ நீங்க ஹும்னு சொன்னவுடனேயே என்னால அழ முடியும்.


***

ஜட்ஜ்: என்ன, நீல நிறத்துல டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இருக்கீங்க? நீங்க நினைவுகளா? ஹா ஹா ஹா!


ஜோடி: சார், போன வாரம் வெள்ளை நிறத்துல போட்டோம் உடனே தேவதைகளானு கேட்டீங்க? இப்போ இப்படி கேக்கறீங்க. நாங்களே நீங்க எடுத்த அந்த படத்த பத்தி மறக்கனும்னு நினைக்கிறோம். நீங்க விடாம நினைவு படுத்தி கிட்டே இருக்கீங்களே சார். இது நினைவுகள் இல்ல சார் கொடுமைகள்.


***

ஜட்ஜ்: நீங்க ரெண்டு பெரும் நல்லா ஆடி இருந்தீங்க. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி மூணுமே இருந்தது. ஆனா நீங்க செலக்ட் பண்ண பாட்ட பாடுனவரோட வாய்ஸ் சரி இல்ல. அதனால இந்த வாரம் நான் உங்களுக்கு கொடுக்குற மார்க் -3.


ஜோடி: எதுக்கு சார் -3? நாங்க ரெண்டு பேரும் தான் நல்ல ஆடுனோமே சார்?

ஜட்ஜ்: இப்போ பாருங்க. ஒரு வண்டி மேட்டு மேல ஏறும் போது ஆக்ஸ்லேடர் வொர்க் ஆகலைன்னா வண்டி ஊரு போயி சேராது. பின்னால தான் போகும்.


ஜோடி: பட் நாங்க ஊருக்கே போகலையே சார். டான்ஸ் ஆட தான வந்து இருக்கோம். நாங்க ஆடுனதுக்கு அட்லீஸ்ட் நீங்க 0 மார்க் ஆவது கண்டிப்பா கொடுக்கணும் சார்.


***


ஜோடி: எங்களுக்கு இந்த ஜோடி நம்பர் 1ல வந்து ஆடி பரிசு வாங்கனும்னு எல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க வீட்டு ஜிம்மி எப்ப ஜோடி நம்பர் ஒன் போட்டாலும் வந்து டிவி முன்னாடி நின்னுகிட்டு முதல்ல உங்கள பார்த்து குறைக்கும் அப்புறம் எங்கள பார்த்து குறைக்கும். அப்பவே அது எங்கள உங்க முன்னாடி ஆடி உங்க கிட்ட இருந்து நல்ல பேர் வாங்கனும்னு சொல்றது எங்களுக்கு புரிஞ்சிது. இப்போ ஜிம்மி எங்களோட இல்ல சார்.


ஜட்ஜ்: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு என்னோட மார்க் 10. நான் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் நெனச்சத செய்வேன். சரி உங்க ஜிம்மிக்கு என்ன ஆச்சு?


ஜோடி: பிரசவத்துக்கு அவங்க மாமியார் வீட்டுக்கு போயிருக்கு சார்.


***

இயக்குனர்: பேசிகிட்டிருக்கும் போதே நீங்க கோவம் வந்து உங்க ஜோடிய பளார்னு ஒரு அரை விடறீங்க.


பெண் ஜோடி: என்ன சார். அவர் என்ன அரஞ்சா என் இமேஜ் என்ன ஆகும் சார்?


இயக்குனர்: கவலை படாதீங்க. நீங்க அடுத்த எபிசோட்ல பத்து பேரோட போயி அவர பின்னி பிடல் எடுக்கறீங்க.


பெண் ஜோடி: அப்ப ஓகே சார்.


***

விஜய் டிவி விளம்பரம்:


உங்களுக்கு நல்லா கை தட்ட வருமா? யாரவது அழுவதை பார்த்தா, உடனே அழ வருமா? சும்மா ஒக்கார்ந்து வேடிக்கை பார்க்க உங்களுக்கு ஐந்நூறு ரூபாய் பணமும், சிக்கன் பிரியாணியும் வேணுமா? உடனே விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நேயர்கள் நேர்முக தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்.

Saturday, March 15, 2008

பிரதிபிம்பங்கள் - மார்ச் 2008 PIT புகைப்படப் போட்டி

இந்த முறை தலைப்பு தலையை பிச்சிக்க வச்சுடுச்சு. தலைப்ப பார்த்தவுடனே தோன்றுவது ஒன்று தண்ணீரில் பிரதிபலிப்பு இல்ல கண்ணாடியில் பிரதிபலிப்பு. இது இல்லாம வேறு எதாவது எடுக்கலாம்னு யோசிச்சி யோசிச்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடுச்சு. கடைசியில் இறுதி நாள் நெருங்கி விட்டதால், மேலே சொன்ன இரண்டு விதத்திலும் படங்களை எடுத்து போட்டு இருக்கேன். பார்த்தீங்கனா எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க!
மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டவை.