Monday, May 26, 2008

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.


சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா நாட்டில் உள்ள சொர்கம்னு சொல்ல கூடாதான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது. நான் சிங்கப்பூரில் வசிப்பதால் அப்படி எழுதினேன். புலாவ் தியோமன் மலேசியா நாட்டில் உள்ள ஒரு அழகிய தீவு ஆகும். புலாவ் என்றால் மலாய் பாஷையில் தீவு என்று அர்த்தம். இங்குள்ள பல தீவின் பேர்களுக்கு முன்னால் இந்த 'புலாவ்' என்ற வார்த்தை இருக்கும். தியோமன் உலகின் முதல் பத்து அழகிய தீவுகளில் ஒன்றாக விளங்கிற்று. இப்பவுமானு தெரியல. இதை பற்றி இன்னும் விலாவாரியாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


நான் தாய்லாந்து நாட்டில் இருக்கும் 'புக்கெட்' தீவுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு கிடைக்கும் தனிமையும், அமைதியும் அங்கு இல்லை. ஒரு இரண்டு தெருவை சேர்த்து வைத்தா எவ்வளவு பெருசா இருக்குமோ அந்த அளவுக்கு ஒரு சிறிய இடம், அதில் ஒரே ஒரு ரிசோர்ட்(resort), அதற்கு சொந்தமான ஒரு இருபது, முப்பது குடில்கள், குடிலின் முன் பக்கத்தில் ஒரு இருபதே மீட்டர் தொலைவில் கடல், பின் புறம் பெரிய மலையில் அடர்ந்த காடு, இது தாங்க புலாவ் தியோமன்.


நாங்கள் அங்கு சென்ற நேரமும் மிகச்சரியான நேரம் போல. மொத்தமே ஒரு நாப்பது பேர் தான் இருந்திருப்பார்கள். மூன்று நாள், இரண்டு இரவு அங்கு தங்கி இருந்தோம். மார்ச் முதல் அக்டோபர் வரை இங்கு பயணம் செய்ய தகுந்த நேரமாகும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த தீவு மோசமான காற்று மற்றும் தட்பவெப்ப நிலையால் மூடப்பட்டிருக்கும்.

இங்கு செல்வதற்கு மெர்சிங்(Mersing) என்னும் இடத்தில் இருந்து பயணப்படகு மூலம் செல்ல வேண்டும். இந்த பயணத்திற்கு ஒரு மணி நேரம் ஆகும். சிங்கப்பூரில் இருந்து மெர்சிங் செல்வதற்கு பேருந்தில் ஒரு ஆறு மணி நேரம் ஆகும். பெர்ஜாயா ஏர்(Berjaya Air) என்னும் விமானம் மூலம் கூட இங்கு செல்லலாம். இது பெர்ஜாய ரிசோர்ட்டில் இருக்கும் விமான தளத்தில் வந்து இறங்கும். அங்கிருந்து மற்ற ரிசோர்ட்களுக்கு செல்ல பயணப்படகு மூலம் செல்ல வேண்டும்.

கீழே உள்ள படத்தில் நாங்கள் மேர்சிங்கில் இருந்து தியோமனுக்கு பயணப்படகில் புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.


தியோமனில் ஒவ்வொரு ரிசோர்டும் இப்படி தான் தனித்தனியாக இருக்கும்.

ஒரு ரிசோர்ட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரிசோர்டிற்கு செல்ல பயணப்படகு மூலம் தான் செல்ல முடியும். நீச்சல் தெரிந்தால் நீந்தி செல்லலாம்.

இங்கு கடல் நீர் மிக தெள்ளத்தெளிவாக இருக்கும். தண்ணீருக்கு அடியில் அனைத்தும் மிகத்தெளிவாக தெரியும். கரையில் இருந்தே இங்கு பவழப்பாறைகள் ஏராளமாக இருக்கும். கடற்கரையில் இருக்கும் பவழப்பாறைகள் பெரும்பாலானவை இறந்து போனவைகளாக இருக்கும். சற்று உள்ளே சென்றால் கண்ணை கவரும் வகையில் மீன்களும், பவழப்பாறைகளும் இருக்கும்.


நாங்கள் தங்கி இருந்த விடுதி இது தான். இதில் மொத்தம் நாலு அறைகள் இருக்கும். மேலே உள்ள இரண்டில் நானும் என் கூட வந்த நண்பரும் தங்கி இருந்தோம். இரண்டையும் உள்ளே உள்ள இரு கதவுகளை திறந்து இணைத்து கொள்ளலாம். இதிலிருந்து ஒரு முப்பது மீட்டர் தொலைவில் கடற்கரை. பின்னாடி அடர்ந்த காட்டுடன் மலை. காலையில் எழுந்தவுடன் அந்த மாடி முகப்பில் குந்திக்கிட்டு, கடற்கரையை பார்த்து கொண்டே தேநீர் அருந்துவதில் உள்ள சுகம் இருக்கே, அது சொல்லி தெரியாது.


இந்த விடுதியை பாருங்கள். இது கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது. கதவை திறந்தால் நேரா கடல் தான். இரவு வந்தால் இங்கு கடல் சற்று உள் வாங்குவதை கண்டு சற்றே பயம் எட்டிப் பார்த்தது. எல்லாம் சுனாமி பயம்தான். இங்கு ஓடி ஒளிய கூட முடியாது. விடிய விடிய அது தானாக பழையபடி மேலே வந்துவிடும்.இந்த படத்தில் தெரிவது பக்கத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சி. இங்கு செல்ல எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இங்கிருந்து பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது.இருந்தாலும் நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே ராக் பால்ஸ் என்ற இந்த நீர் விழுச்சி இருந்தது. காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். சுத்திலும் அடர்ந்த காடு. ஆள் நடமாட்டமே இல்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கையில் கிடைத்த இரண்டு குச்சியை எடுத்து கொண்டு நடந்தோம். கொஞ்ச தூரம் சென்றதும் வழி தெரிய வில்லை. திரும்பி விடலாம் என்று எண்ணிய போது ஒரு அழகிய சீன ஜோடிகள் குளித்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்பாடா என்று அவர்கள் வந்த வழியே சென்று அந்த நீர்வீழ்ச்சியை அடைந்தோம். ஒரு பத்து பேர் அங்கு இருந்தனர். தண்ணீர் சுத்தமாகவும், இனிப்பாகவும், சில்லென்று இருந்தது. ஒரு குளியலை போட்டு விட்டு திரும்பினோம்.
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது கடல் கரையிலேயே தெரியும் பவழப்பாறைகள். தண்ணீருக்குள் நடந்தே சென்றால் இன்னும் அழகான கண்ணை கவரும் வகையில் பவழப்பாறைகளை காணலாம். மிகக் குறைந்த விலைக்கு அங்கு கிடைக்கும் காப்புச்சட்டையும்(Life Jacket), முகமூடியும்(Mask) வாங்கி கொண்டால் ஸ்நோர்கெல்லிங்(Snorkelling) செய்து இன்னும் நன்றாக பார்க்கலாம்.

ஸ்குபா டைவிங், ஸ்நோர்கெல்லிங், வாட்டர் பைக், கநோயிங்(Canoeing) போன்ற தண்ணீர் விளையாட்டுகளும் இங்கு இருக்கிறது. ஸ்குபா டைவிங்கிற்கு இங்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார்கள். பல வெளிநாட்டினர் இங்கு ஸ்குபா டைவிங் கற்று கொள்ள வருகிறார்கள். பயிற்சி முடிவில் அதற்கான சான்றிதழும் தருகிறார்கள்.


மரைன் பார்க்(Marine Park) என்றொரு இடத்திற்கு சென்றால் பலவகையான வண்ண வண்ண மீன்களை காணலாம். அவற்றுடன் சேர்ந்து நீங்களும் நீந்தலாம். கடலின் கரையில் இருந்து ஒரு பெரும் பகுதியை அடி வரை வலை போட்டு தனியாக பிரித்திருப்பார்கள். மீன்களால் அதை மீறி கடலுக்குள் செல்ல முடியாது. கீழே உள்ள படத்தில் நான் மீன்களுக்கு உணவு அளிப்பதை காணலாம்.


இது தான் நாங்கள் தங்கி இருந்த ரிசோர்ட்டின் பீச் பார். இங்குள்ள உணவகத்தில் உணவு வகைகள் எல்லாம் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக கடல் வகை உணவுகள். அதனால் எங்களுக்கு சாப்பாட்டு குறையே தெரியவில்லை. கொஞ்சம் பணக்குறை தான் தெரிந்தது. ஏனென்றால் இங்கு உணவு கொஞ்சம் விலை கூட.நீச்சல் குளம், மேசைக் கோல் பந்தாட்டம்(Snooker), ஸ்பா(Spa) போன்றவைகளும் இங்கு உள்ளன. ஸ்நூக்கர் மட்டும் ஆடினோம். மற்ற இரண்டும் முயற்சி செய்து பார்க்கவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தின் கடற்கரை நீளம் இது தான். அந்த கடைசியில் ஒரு குட்டி தீவு தெரிகிறதா? அதற்கும் சென்று பார்த்தோம். ரொம்ப அழகான தீவு அது. சுற்றிலும் தெள்ளத்தெளிவான தண்ணீர். கொஞ்சம் சாகசமானதாகவும் இருந்தது.
போகும் வழியில் இந்த பழைய படகுகளை கண்டதும் அனகோண்டா படம் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்தியது.

இந்த படத்தில் எனக்கு வலது பக்கத்தில் தான் அந்த குட்டி தீவு. என் பின் புறத்தில் தெரிவது பெர்ஜாயா ரிசோர்ட். அப்படியே தண்ணிரில் நீந்தி சென்றால் அந்த ரிசோர்ட்டுக்கு சென்று விடலாம். தண்ணீரை பார்த்தீர்களா? எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இங்கே ஒரு இரண்டு மணி நேரம் செலவழித்தோம்.

இந்த இடத்தில் தான் நான் எனது கால் தடுக்கி என் புகைப்படக்கருவியை தண்ணீரில் நனைத்து விட்டேன். அதுக்கப்புறம் அது வேலை செய்யவில்லை. அதை கொடுத்து விட்டு வேறு புகைப்பட கருவியை வாங்குவதாக ஆயிற்று. ரொம்ப வருத்தமாக இருந்தது. நல்ல வேளையாக நான் அதில் பிடித்த படங்கள் ஒண்ணும் ஆகவில்லை. உப்பு தண்ணீர் புகைப்பட கருவிக்கு பயங்கரமான எதிரி. ஜாக்கிரதையாக இருங்கள்!

அவ்வளோதாங்க! நாங்கள் தியோமன்னை விட்டு கிளம்பும் போது அந்த வானமே கண்ணீர்விட்டு அழ தயாராகி விட்டது. கிளம்பும் போது படகில் இருந்து எடுத்த படத்தை நீங்களே பாருங்கள். அதை கான மனம் இல்லாமல் நாங்கள் பிரியா விடை பெற்று கொண்டு கிளம்பி விட்டோம்.

Thursday, May 15, 2008

ஜோடி - மே 2008 PIT புகைப்படப் போட்டி

ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Wednesday, May 7, 2008

பூனை குசும்பு!

சில பேரை திட்டும் போது பூனை குசும்பன்னு சொல்லி திட்டுவாங்களே கேள்வி பட்டிருக்கீங்களா? அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியலைன்னா இந்த வீடியோ காட்சியை பாருங்கள். உங்களுக்கே புரியும்;)

Friday, May 2, 2008

திருநங்கைகள்

விஜய் டிவில 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சி பார்த்தேன். ரொம்பவே உருக்கமா இருந்துச்சு. குறிப்பா நான் சொல்றது ரோஸ் திருநங்கைகளோட ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்களே அதை பத்தி தான். நீங்க அதை பார்க்கலைன்னா இங்க போயி பாருங்க (இது ஒரு பகுதி தான். மத்த பகுதி எல்லாம் அங்கேயே இருக்கும்).

இதுல பேசுன ஒவ்வொரு திருநங்கைகளோட திறமைகளை பார்க்கும் போது ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இவங்கள்ல பல பேர் ரொம்ப நாளாவே வலைப்பதிவு ஆரமிச்சி எழுதிட்டு வராங்கன்றதும் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. உண்மைய சொல்ல போனா இவங்களுக்கு திருநங்கைகள்னு ஒரு பேரு இருக்குன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன். எல்லாரையும் போல நானும் உஸ்ஸ், ஒன்பது, அலி அப்படீன்னு தான் சொல்லுவேன். ஆனா இந்த நிகழ்ச்சிய பார்த்ததுக்கப்புறம் இந்த மாதிரி எல்லாம் கூப்பிட வாய் வர மாட்டேங்குது.

நான் ஹைதராபாத்ல வேலை பார்க்கும் பொழுது அடிக்கடி சார்மினார் இல்ல சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல சென்னை வருவேன். ஹைதராபாத்ல ரயில் ஏறும்போதே ஒரு பத்து ரூபாயை எடுத்து பாக்கெட்ல வச்சுக்குவேன். ஏன்னா ரயில் கிளம்பி கொஞ்ச நேரத்துல ஒரு நாலு, அஞ்சு திருநங்கைகள் காசு வாங்க வருவாங்க. காசு கம்மியா கொடுத்தாலும் சரி, இல்ல கொடுக்கவே இல்லைனாலும் சரி ஏதாச்சும் திட்டுவாங்க. நமக்கு தர்ம சங்கடமா ஆயிடும். இதுக்காகவே முதல காச கொடுத்து அனுப்பிடறது.

இந்த மாதிரி எல்லாம் இவங்கள்ல சில பேர் செய்யறதால இவங்கள ஒட்டு மொத்தமா ஒதுக்கறது நியாயம் இல்ல. நாம் அவர்களை நடத்தும் விதம் கூட அவர்களை இப்படி மாற்றி விட்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அப்பவெல்லாம் இவங்கள பத்தி ஏதாச்சும் யோசிச்சிகிட்டே இருப்பேன். இவங்க ஏன் இப்படி செய்யறாங்க. இவங்களுக்கு குடும்பம் இல்லையா? ஒரு குடும்பத்துல இவங்கள மாதிரி யாராச்சும் பிறந்தாங்கனா என்ன செய்வாங்க? சமுதாயத்துல அனாதைகள், ஊனமுற்றவர்கள் இப்படி யார பார்த்தாலும் நாம பரிதாப படறோம், ஆனா இவங்கல பார்த்து மட்டும் யாருமே ஏன் பரிதாப மாட்டறாங்க? இவங்களுக்கு வாழ வேற வழியே இல்லையா? அப்படி இவங்களுக்கு உடல் ரீதியா என்ன குறை பாடு? இப்படி பல கேள்விகள் எனக்குள் ஓடும். இதெற்கெல்லாம் எனக்கு இந்த 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் விடை கிடைத்தது. விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நம் சமுதாயத்தில் நாம் இவர்களை அருவெறுப்பாக பார்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சினிமாவில் கூட இவர்களை கேலிக்கூத்தாக தான் காண்பிக்கிறார்கள். இதில் மிகவும் வருந்தத்தக்கது தென் இந்தியாவில் தான் இவர்களை மிகவும் கேவலமாக நடத்துவதாக இவர்களே சொல்கிறார்கள். வட நாட்டில் இவர்களுக்கு மரியாதை தருகிறார்களாம். இது நான் சற்றும் எதிர் பார்க்காத விஷயம். இவர்களை நாம் மனிதர்கள் என்று கூட ஏற்றுக்கொள்வது இல்லை. நமது அரசாங்கம் கூட இவர்களுக்கு எதுவும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இவர்களுக்கு வெளிநாடுகளில் கொடுக்கப்படும் மரியாதையே வேறு. நான் ஸ்டார் க்ரூஸ் என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த போது இவர்களை வைத்து ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தினர். இவர்களை தாய்லாந்து நாட்டின் 'லேடிபாய்ஸ்' என பெருமையாக அறிமுகப்பதுத்தினர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் நாம் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இது போல் அங்கீகாரம் இவர்களுக்கு நம்மூரில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.


இதுவரை நான் இவர்களில் ஒருவரை கூட நேரில் அழுது பார்த்ததில்லை. அத்தனை கவலைகளையும் தங்கள் மனதில் போட்டு புதைத்து கொண்டு வாழ்கிறார்கள். என்னதான் இவர்கள் ஆபரேஷன் செய்துக் கொண்டு பெண்ணாய் மாறினாலும், இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. இவர்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாது. பெண் மனம் கொண்டுள்ளதால் உடலை மட்டும் பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இதில் இவர்களின் தவறு எதுவும் இல்லை. இவர்களை படைத்த அந்த ஆண்டவனின் தவறு. இதை சரி செய்ய இது வரை வழி எதுவும் இல்லை. இப்படி இவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமும் இவர்களை நோகடிக்காமல், இருபாலினர்களைப் பற்றி நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் மேல் நாடுகள் போல, இவர்களும் நம் நாட்டில் சமூகத்தில் கெளரவமாய் வாழலாம்.


இதை வவாசங்க போட்டிக்காக எழுதவில்லை, இருந்தாலும் இதுவும் அந்த போட்டிக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.