Wednesday, August 13, 2008

குசேலன் - ஒரு திருவிளையாடல்

திருவிளையாடலுக்கும், குசேலனுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னும் இல்ல. சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து, எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி இது. அதாவது இந்த குசேலன் படம் சூப்பர் ஸ்டாரின் திருவிளையாடல்களுள் ஒன்றாம்.

எல்லா சக நடிகர்களும்(தேவர்களும்), சில அல்லக்கைகளும் சென்று சூப்பர் ஸ்டாரிடத்தில் முறையிட்டுள்ளனர். தங்கள் படங்கள் சூப்பராக இருந்தும் சுமாராகவே ஓடுகிறதாகவும், டீ ஆத்தறவனெல்லாம் திரை விமர்சனம் பண்ணி படத்தை ஓட விடாம பண்ணிடரதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் தான் ஒரு வழி பண்ண வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர். குருவி, இந்திரலோகத்தில் ந அழகப்பன், அரசாங்கம் போன்ற பல படங்கள் இதனால் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிவாஜி, தசாவதாரம் படம் கூட நல்லா இல்லைன்னு பலர் எழுதி இருப்பதை அவரிடத்தில் காட்டி இருக்கிறார்கள்.

வெகுண்டு எழுந்த ரஜினியும் உண்மையிலேயே ஒரு மட்டமான படம்னா அது எப்படி இருக்கும்னு மக்களுக்கு புரிய வைக்க தீர்மானித்தார். இப்படி தீர்மானித்தவுடனே அவரின் மனதில் தோன்றிய முதல் இயக்குனர் பி.வாசு தான். இருப்பினும் பேரரசுவும் பி.வாசுவுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கிறார். ஆனால் பேரரசு தன் கதைக்கு கண்டிப்பாக 'பெங்களூரு' என்று தான் பெயர் வைப்பேன் என்று அடம் பிடித்ததால் அடித்தது யோகம் பி.வாசுவிற்கு. பி.வாசுவும் தன் கையில் கிடைத்த பூ மாலையை சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கார். நடிப்பிற்கு பசுபதியும், எரிச்சலுக்கு வடிவேலுவும், கடுப்பிற்கு மீனாவும், அறுவைக்கு மற்ற எடுபிடிகளும், ஆறுதலுக்கு சூப்பர் ஸ்டாரும், கிளு கிளுப்பிற்கு நயன்தாராவும், ஒப்புக்கு சப்பாவிற்கு பிரபுவும் இருக்க மொக்கையான இசையுடன் படு மொக்கையா எடுத்த படம் தான் குசேலன்.

இப்படி ஒரு படம் எடுக்க செய்து, தனது இந்த திருவிளையாடல் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சூப்பர் ஸ்டார். படத்தை பார்த்திருந்தீங்கனா உங்களுக்கு அது புரியும். பலர் இந்த படத்தை பார்த்து விட்டு குருவியை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வதே இதற்கு சான்று.

இதை எல்லாம் தெரியாமல் அப்பாவியாக சென்று படத்தை பார்த்து விட்டு வந்தவன் நான். இதற்கு காரணம் இந்த விமர்சனம் தான். நான் முதன் முதலாக குசேலனை பற்றி படித்த விமர்சனம்:

Stupendous! Marvelous! Wordless! It’s so surprising to see that Director Vasu has churned out a best movie in his entire career.......
Verdict: Strictly recommended to watch

எந்த புண்ணியவானோ படத்தை பார்த்துட்டு, வேணும்னே இப்படி எழுதி பல பேரை சிக்க வச்சிருக்கார். நல்லா இருங்கையா! "First impression is the best impression" இல்லையா! நானும் இதுக்கு அப்புறம் சில நேர்மாறான விமர்சனங்களை படித்தும் மனம் ஒத்துகொள்ள முடியாமல்(தலைவர் படமாச்சே) படத்துக்கு போயிட்டேன். கடைசியில் பட்டால் தான் தெரியும் என்பது நிஜமாகி விட்டது.

படத்துக்கு எனது நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். நண்பர் ஒருவரின் ஐந்து வயது மகனை முதல் முறையாக திரையரங்கிற்கு அழைத்து சென்றோம். அவன் 'சிவாஜி' படத்தை நல்லா ரசித்து பார்த்தான் என்று சொன்னார்கள். சரி என்று அவனை தைரியமாக அழைத்து சென்றோம். படம் ஆரமிச்சு ஒரு அறை மணி நேரம்தான் இருக்கும், பையன் தூங்கிட்டான். இனிமே அவன் படம் பார்க்க கூட்டிகிட்டு போனா வருவானா?

படம் முடிஞ்சி நைட் வெளிய வரும்போது மணி பத்து. வெளியில அடுத்த ஷோ பார்க்க ஆவலா நின்னுகிட்டு இருந்தவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருந்துச்சு. பின்ன, நாங்களாச்சும் ஏழு மணி ஷோ, அதுக்கே எங்களால முடியல.

இது வரை இப்படி ஒரு மொக்கை படத்தை நான் தியேட்டர் சென்று பார்த்ததே இல்லை. ஒரு டாகுமெண்டரி படம் கூட இன்னும் நல்லா இருந்திருக்கும். பி.வாசு வாழ்க! நான் தலைவர் படத்தை பற்றி இப்படி எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை:( மொத்தத்தில், குசேலன் = இரண்டு வீராசாமி!