விஜய் டிவில 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சி பார்த்தேன். ரொம்பவே உருக்கமா இருந்துச்சு. குறிப்பா நான் சொல்றது ரோஸ் திருநங்கைகளோட ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்களே அதை பத்தி தான். நீங்க அதை பார்க்கலைன்னா இங்க போயி பாருங்க (இது ஒரு பகுதி தான். மத்த பகுதி எல்லாம் அங்கேயே இருக்கும்).
இதுல பேசுன ஒவ்வொரு திருநங்கைகளோட திறமைகளை பார்க்கும் போது ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இவங்கள்ல பல பேர் ரொம்ப நாளாவே வலைப்பதிவு ஆரமிச்சி எழுதிட்டு வராங்கன்றதும் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. உண்மைய சொல்ல போனா இவங்களுக்கு திருநங்கைகள்னு ஒரு பேரு இருக்குன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன். எல்லாரையும் போல நானும் உஸ்ஸ், ஒன்பது, அலி அப்படீன்னு தான் சொல்லுவேன். ஆனா இந்த நிகழ்ச்சிய பார்த்ததுக்கப்புறம் இந்த மாதிரி எல்லாம் கூப்பிட வாய் வர மாட்டேங்குது.
நான் ஹைதராபாத்ல வேலை பார்க்கும் பொழுது அடிக்கடி சார்மினார் இல்ல சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல சென்னை வருவேன். ஹைதராபாத்ல ரயில் ஏறும்போதே ஒரு பத்து ரூபாயை எடுத்து பாக்கெட்ல வச்சுக்குவேன். ஏன்னா ரயில் கிளம்பி கொஞ்ச நேரத்துல ஒரு நாலு, அஞ்சு திருநங்கைகள் காசு வாங்க வருவாங்க. காசு கம்மியா கொடுத்தாலும் சரி, இல்ல கொடுக்கவே இல்லைனாலும் சரி ஏதாச்சும் திட்டுவாங்க. நமக்கு தர்ம சங்கடமா ஆயிடும். இதுக்காகவே முதல காச கொடுத்து அனுப்பிடறது.
இந்த மாதிரி எல்லாம் இவங்கள்ல சில பேர் செய்யறதால இவங்கள ஒட்டு மொத்தமா ஒதுக்கறது நியாயம் இல்ல. நாம் அவர்களை நடத்தும் விதம் கூட அவர்களை இப்படி மாற்றி விட்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அப்பவெல்லாம் இவங்கள பத்தி ஏதாச்சும் யோசிச்சிகிட்டே இருப்பேன். இவங்க ஏன் இப்படி செய்யறாங்க. இவங்களுக்கு குடும்பம் இல்லையா? ஒரு குடும்பத்துல இவங்கள மாதிரி யாராச்சும் பிறந்தாங்கனா என்ன செய்வாங்க? சமுதாயத்துல அனாதைகள், ஊனமுற்றவர்கள் இப்படி யார பார்த்தாலும் நாம பரிதாப படறோம், ஆனா இவங்கல பார்த்து மட்டும் யாருமே ஏன் பரிதாப மாட்டறாங்க? இவங்களுக்கு வாழ வேற வழியே இல்லையா? அப்படி இவங்களுக்கு உடல் ரீதியா என்ன குறை பாடு? இப்படி பல கேள்விகள் எனக்குள் ஓடும். இதெற்கெல்லாம் எனக்கு இந்த 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் விடை கிடைத்தது. விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
நம் சமுதாயத்தில் நாம் இவர்களை அருவெறுப்பாக பார்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சினிமாவில் கூட இவர்களை கேலிக்கூத்தாக தான் காண்பிக்கிறார்கள். இதில் மிகவும் வருந்தத்தக்கது தென் இந்தியாவில் தான் இவர்களை மிகவும் கேவலமாக நடத்துவதாக இவர்களே சொல்கிறார்கள். வட நாட்டில் இவர்களுக்கு மரியாதை தருகிறார்களாம். இது நான் சற்றும் எதிர் பார்க்காத விஷயம். இவர்களை நாம் மனிதர்கள் என்று கூட ஏற்றுக்கொள்வது இல்லை. நமது அரசாங்கம் கூட இவர்களுக்கு எதுவும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இவர்களுக்கு வெளிநாடுகளில் கொடுக்கப்படும் மரியாதையே வேறு. நான் ஸ்டார் க்ரூஸ் என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த போது இவர்களை வைத்து ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தினர். இவர்களை தாய்லாந்து நாட்டின் 'லேடிபாய்ஸ்' என பெருமையாக அறிமுகப்பதுத்தினர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் நாம் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இது போல் அங்கீகாரம் இவர்களுக்கு நம்மூரில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
இதுவரை நான் இவர்களில் ஒருவரை கூட நேரில் அழுது பார்த்ததில்லை. அத்தனை கவலைகளையும் தங்கள் மனதில் போட்டு புதைத்து கொண்டு வாழ்கிறார்கள். என்னதான் இவர்கள் ஆபரேஷன் செய்துக் கொண்டு பெண்ணாய் மாறினாலும், இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. இவர்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாது. பெண் மனம் கொண்டுள்ளதால் உடலை மட்டும் பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
இதில் இவர்களின் தவறு எதுவும் இல்லை. இவர்களை படைத்த அந்த ஆண்டவனின் தவறு. இதை சரி செய்ய இது வரை வழி எதுவும் இல்லை. இப்படி இவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமும் இவர்களை நோகடிக்காமல், இருபாலினர்களைப் பற்றி நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் மேல் நாடுகள் போல, இவர்களும் நம் நாட்டில் சமூகத்தில் கெளரவமாய் வாழலாம்.
இதை வவாசங்க போட்டிக்காக எழுதவில்லை, இருந்தாலும் இதுவும் அந்த போட்டிக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
2 comments:
ரொம்ப அழகான பதிவு. நானும் பார்த்தேன் நிகழ்ச்சியை. இனி இந்த சமுதாயத்தின் கையில் தான் எல்லாமே. இப்படி ஒரு நிகழ்ச்சியை தரும் விஜய் டீவிக்கு பாராட்டுகள்
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி காயத்ரி! கண்டிப்பா இந்த நிகழ்ச்சியை பார்த்த எல்லார் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
Post a Comment