Tuesday, July 1, 2008

அரசியல் பயிற்சி பள்ளி

சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?

அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.

இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:

1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.

3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.

4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.

சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.

1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.

2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.

3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!

4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)

5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!

6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.

7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.

8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).

9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.

10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.

11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.

12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.

இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!

8 comments:

கப்பி | Kappi said...

:)))

12 என்ன மாணவர்களுக்கு பனிஷ்மெண்டா? :))

//. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு.//

சு.சொ ரெண்டும் இருக்கனும்ல? குழப்பறீங்களே :))

சின்னப் பையன் said...

அவ்வ்வ்... போட்டுத் தாக்கறீங்க....

(ச்சே. எனக்கு இந்த ஐடியா தோணாமெ போயிடுச்சே....:-((((()

Sathiya said...

//சு.சொ ரெண்டும் இருக்கனும்ல? குழப்பறீங்களே :))//
கப்பி நான் சொன்ன விளக்கம் சும்மா லொல்லலாயிக்கு;) வெ என்றால் வெ...ம், மா என்றால் மா....ம், சொ என்றால் சொ...னை. புரியுதா?;)

Sathiya said...

வாங்க ச்சின்ன பையன்! உங்களுக்கும் இந்த மாதிரி நிறைய தோணி(குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்) இருக்குதே;)
பாதை தான் வேறு ஆனால் குறிக்கோள் ஒன்னு தானே;)

தமிழினி..... said...

இது தான் tragic காமடி என்பதோ....
எது எப்படியோ...நல்ல சிந்தனை...

Sathiya said...

நன்றி தமிழினி!
//இது தான் tragic காமடி என்பதோ//
அதே அதே;)

உலகன் said...

நண்பர் மன்னிக்க வேண்டும். உண்மையாகவே முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனரான டி.என்.சேஷன் புனேயில் அரசியல் பயிற்சிக் கல்லூரி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அங்கு சிலபஸில் நீங்கள் பரிந்துரைப்பவை எல்லாம் இருக்கிறதா என்று விசாரிக்கவும். அல்லது குறைந்தபட்சம் இன்-பிளான்ட் டிரெய்னிங்குக்கு ஏதேனும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற அவைகளுக்கு, வேண்டாம் ஐயா, நம்ம லோக்கல் கவுன்சில் கூட்டங்களுக்கேனும் அனுப்புகிறார்களா என்றும் கேட்டுச் சொல்லவும்.

கற்க கசடற.

Sathiya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உலகன். கண்டிப்பா விசாரிச்சி சொல்றேன்;)