Wednesday, July 2, 2008

நடிகர் சங்கமும், திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரும்

இதை பற்றி நான் ஒரு மாதம் முன்னரே எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. இப்போ தினமும் சன் டிவியில் 75 ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டம் என்று தினமும் ஒரு பழைய படத்தை இரவில் ஒளிபரப்பி வருகிறார்கள். அதை பார்த்ததும் எனக்கு இந்த பதிவை போட வேண்டும் என்று தோனியது.


எம்.கே.தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். இவர் நடித்த ஹரிதாஸ் படம் தொடர்ந்து மூன்று வருடம் ஓடி சாதனை பண்ணியது. இவரை பற்றி படிக்கும் போதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். அவர் பாடிய பாடல்களை இன்றும் மறக்க முடியாது. அப்பேற்பட்டவரின் மனைவி ராஜாம்பாள் இன்று வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார். இந்த செய்தி கடந்த மாதம் பத்திரிக்கைகளில் வந்தது.

இதை அறிந்து மருத்துவ செலவிற்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 1999ம் ஆண்டே அவருக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கியதும் கலைஞர் கருணாநிதி அவர்களே. ராஜாம்பாள் இன்று சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள்.

லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதிலும்(பிறகு நிரபராதி என்று வெளியே வந்தார்), சொந்த படம் எடுத்ததிலும் தன் பணம் அனைத்தையும் இழந்தார். 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!

இப்போது இவர்கள் நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயை கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளோ நடந்தும் நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதே, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் அவர்கள் செய்ய வேண்டிய கடமை அல்லவா?

75 ஆண்டு கால தமிழ் சினிமா என்று கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அப்படி நடத்தும் பொழுது முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பெயரையை பெருமையாக சொல்லும் பொழுது, அவர்களின் குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டார்களா? இது போதாதென்று அடிக்கடி நலிவுற்ற கலைஞர்களுக்கான கலை நிகழ்ச்சி என்று வேறு நடத்துகிறார்கள். அப்படி சேர்க்கும் பணத்தை எல்லாம் என்னதான் செய்கிறார்கள்? சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரின் குடும்பத்துக்கே இந்த நிலைமை என்றால், திரைக்கு பின் வேலை செய்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்? இப்பொழுதெல்லாம் அரசியலில் உள்ள அரசியலை விட நடிகர் சங்கத்தில் அரசியல் அதிகமாக உள்ளது. இது போதாதென்று அரசியல் கட்சி ஆரமிக்க நடிகர் சங்க தலைவர் பதவியை வைத்து ஒத்திகை பார்த்து கொள்கிறார்கள்.

கலைஞருக்கு முன்னாடி இவங்க தான முதல ராஜாம்பாள் அம்மாளுக்கு ஓடி சென்று உதவி செய்திருக்க வேண்டும்? நடிகர் சங்கத்திலேயே இந்த அழகுல இருக்காங்களே, இவங்க அரசியலுக்கு வந்தா எப்படி ஆட்சி செய்வாங்கனு நீங்களே யோசிச்சி பாருங்க.

7 comments:

சரவணகுமரன் said...

கஷ்டம்தான்...:-(

தமிழினி..... said...

குஷ்பூ எப்போ சாமி சிலை பக்கத்தில கால்மேல கால் போட்டு உட்காருவாங்க,ஸ்ரேயா குட்டை பாவடை போட்டுக்கிட்டு எந்த விழாவுக்கு போனாங்க னு கணக்கு போட்டுட்டு இருக்குறவங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா னு தெரில...அந்தம்மாவ பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு சத்யா....

தமிழினி..... said...

come and visit my blog pls!!!u have a surprise over there!!!
-Srividhya(tamizhini)

Sathiya said...

வாங்க சரவணகுமரன்!
//கஷ்டம்தான்...:-(//
சினிமாகாரங்க அரசியலுக்கு வந்தா தானே சொல்றீங்க?

@தமிழினி: சரியா சொன்னீங்க! இந்த மாதிரி சமுதாயத்துல புறக்கணிக்க படற எந்த முதியோர்களை பார்த்தாலும் பாவமா தான் இருக்குங்க! அதிலும் பசங்க இருந்தும் இப்படி ஒடுக்கபடுவோர் நிலைமை ரொம்ப மோசம்!

மாயா said...

சிங்கப்பூர் மலேசியா என்டு நிகழ்ச்சி நடத்தின காசையலெ்லாம் என்ன செய்யினமோ தெரியேல்ல . . .

Sathiya said...

வாங்க மாய! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//சிங்கப்பூர் மலேசியா என்டு நிகழ்ச்சி நடத்தின காசையலெ்லாம் என்ன
செய்யினமோ தெரியேல்ல//
இது போதாதென்று இனிமே எல்லா நடிகர்களும் தங்க சம்பளத்தில் ஒரு சிறிய பங்கினை நடிகர் சங்கத்துக்கு தரவேண்டுமாம். தலைவர் ரஜினி இதை தனது குசேலன் படத்தில் ஆரமித்து வைத்து விட்டார். இந்த பணம் எல்லாம், இது போல் தேவை உள்ளவர்க்கு போய் சேர்ந்தால் நன்று.

Anonymous said...

These ppls are using politics for looting ppls money and fame, not for doing sth good to our country.