Saturday, July 26, 2008

1992ல் ஒரு நாள்

அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.

தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"

(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)

Thursday, July 24, 2008

சிங் இஸ் கிங்

இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.


சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.


அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.


மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.

**********

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.


இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?

**********

இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.

**********

இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.

**********

இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?

**********

இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?

**********

அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.

Monday, July 21, 2008

ஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...

ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரின் திறமையும் சரி, ஒரு நல்ல நடிகர் அல்லது பாடகரின் திறமையும் சரி, அவர்களின் சிறு வயதிலேயே வெளிப்படும். அது போல் ஊருக்கு உழைக்கும் ஒரு சமூக சேவகரின் சமூக சேவையும் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிடும். அப்படி பட்ட ஒரு சமூக சேவகரின் சிறு வயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில் தான். இவரது ஊருக்கு உழைக்கும் பணி சிறு வயதில் இருந்தே தொடங்கிற்று. இவர் வசித்து வந்த தெருவில் யாருக்கு என்ன வேலை ஆக வேண்டி இருந்தாலும் இவரை கூப்பிட்டு தான் செய்ய சொல்லுவார்கள்.

காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார். அவர்கள் புகழ்ந்து கூறும் இரு வார்த்தைகளே இவருக்கு டானிக். தன் அம்மாவே எத்தனையோ முறை கண்டித்தும் இவரது இந்த பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் இவ்வளவு உதவிகள் செய்தும், மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த உதவி இது தான்:

ஒரு நாள் இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பிய ஆள், இவர் வீட்டிற்கு வந்து இவரது அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தால் ரேஷன் கடையில் இருந்து அட்டை இல்லாமல் சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கி தருவதாக சொன்னார். அவர் அந்த ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் ஒருவரின் சொந்தக்காரர் என்பதால் அது சாத்தியம் என்றார். அப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் சர்க்கரையும், மண்ணெண்ணையும் தான் ரொம்ப டிமான்ட். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வச்சுக்குவாங்க.

சரி என்று இவரது அம்மாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அந்த நபரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து, ஒரு மஞ்சா பை மற்றும் கிருஷ்ணாயில் கேனுடன் தன் மகனையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் அச்சிறுவனிடம் வேறு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம் என்றார். நம்ம ஆள் தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே. அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்களின் வீட்டிற்கு எல்லாம் அழைத்து சென்று அனைவரிடமும் பணமும், கிருஷ்ணாயில் கேனும், பையும் வாங்கி கொண்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வதை நினைத்து பெருமையுடன் ரேஷன் கடையை நோக்கி நடை போட்டார்.

ரேஷன் கடை நெருங்கியதும், அந்த நபர் இவரிடம் உள்ள கேன் மற்றும் பைகளை வாங்கி கொண்டு இவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். இவர் உடன் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவ்வாறு கூறினான். அனைவருக்கும் உதவிய மன நிறைவில் இவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டார்.

விளையாடி முடித்து ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டில் இன்று தனக்கு தனி மரியாதை கிடைக்கும் என்ற பெருமிதத்துடன் சென்றார். அப்பாவும், அம்மாவும் இவருக்காக கேட்டின் அருகிலேயே காத்து கொண்டிருந்தனர். இவரை கண்டதும், இவரின் அப்பா "எங்கடா போன இவ்வளோ நேரமா?" என்று கேட்டார். இவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக சொன்னார். பின் உள்ளே வாடா என்று சொல்லி விட்டு போன தந்தையை பின் தொடர்ந்தார்.

இவர் உதவி செய்த யாரோ ஒருவர் இவரை பார்க்க உள்ளே இருக்கார் போல என்று ஆவலாக சென்றார். உள்ளே சென்று தன் தந்தையிடம் அறை மணி நேரம் ரிவிட் வாங்கிய பின் தான் இவருக்கு அந்த ரேஷன் கடை நபர் ஒரு ஏமாத்து பேர் வழி என்று தெரிந்தது. அம்பையே இந்த வாங்கு வாங்குறாரே அப்பா, எய்த வில்லை என்னா வாங்கு வாங்கி இருப்பார் என்று பரிதாபமாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து மனதை தேற்றி கொண்டார்.

இதுக்கப்புறமாவது இவரிடம் வேலை வாங்குவதை நிறுத்தினார்களா? இல்லை. இவரால் ஏமாந்து போனதால் அதை சரி கட்டுவது போல் இன்னும் அதிகமாக வேலை வாங்க ஆரமித்து விட்டார்கள். இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!

பி.கு. மொக்கைக்கு மன்னிக்கவும்;)

Friday, July 11, 2008

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி

போட்டி தலைப்பு: இரவு நேரம்
முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.

இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?
இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!
Moon by Night

Tokyo Tower

Anderson Bridge

Night Shot

The Devil's Tree

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Saturday, July 5, 2008

அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்

அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.

இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.

அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?

Friday, July 4, 2008

ஆஹா! இவர்களும் பெண்கள் தானா?


(Picture Courtesy: Daily Thanthi)
விஷ்வ ஹிந்து பரிஷத் நேற்று நடத்திய பந்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இந்த படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது, அந்த வாகனத்தில் உள்ளவருக்கும் பந்த்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று. அவர் போது மக்களில் ஒருவர். அவரை போட்டு அடிப்பதாலும், கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பதாலும் இவர்கள் நடத்தும் பந்த் வெற்றி அடைந்து விடுமா?

இப்படி பட்ட காரியங்களினால் மக்களிடத்தில் அவர்கள் மதிப்பு இறங்கிவிடுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்காது. சரி தானே? இவர்கள் கடையை அடைக்க சொன்னதால் ஒரு கடைக்காரர் தீக்குளித்து வேறு இருக்கிறார்.

பெண்களே இப்படி வன்முறையில் ஈடுபட்டால், அப்பப்பா! நம்ம நாட்டை நினைச்சா பயமா இருக்குதுங்க!

Wednesday, July 2, 2008

நடிகர் சங்கமும், திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரும்

இதை பற்றி நான் ஒரு மாதம் முன்னரே எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. இப்போ தினமும் சன் டிவியில் 75 ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டம் என்று தினமும் ஒரு பழைய படத்தை இரவில் ஒளிபரப்பி வருகிறார்கள். அதை பார்த்ததும் எனக்கு இந்த பதிவை போட வேண்டும் என்று தோனியது.


எம்.கே.தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். இவர் நடித்த ஹரிதாஸ் படம் தொடர்ந்து மூன்று வருடம் ஓடி சாதனை பண்ணியது. இவரை பற்றி படிக்கும் போதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். அவர் பாடிய பாடல்களை இன்றும் மறக்க முடியாது. அப்பேற்பட்டவரின் மனைவி ராஜாம்பாள் இன்று வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார். இந்த செய்தி கடந்த மாதம் பத்திரிக்கைகளில் வந்தது.

இதை அறிந்து மருத்துவ செலவிற்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 1999ம் ஆண்டே அவருக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கியதும் கலைஞர் கருணாநிதி அவர்களே. ராஜாம்பாள் இன்று சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள்.

லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதிலும்(பிறகு நிரபராதி என்று வெளியே வந்தார்), சொந்த படம் எடுத்ததிலும் தன் பணம் அனைத்தையும் இழந்தார். 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!

இப்போது இவர்கள் நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயை கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளோ நடந்தும் நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதே, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் அவர்கள் செய்ய வேண்டிய கடமை அல்லவா?

75 ஆண்டு கால தமிழ் சினிமா என்று கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அப்படி நடத்தும் பொழுது முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பெயரையை பெருமையாக சொல்லும் பொழுது, அவர்களின் குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டார்களா? இது போதாதென்று அடிக்கடி நலிவுற்ற கலைஞர்களுக்கான கலை நிகழ்ச்சி என்று வேறு நடத்துகிறார்கள். அப்படி சேர்க்கும் பணத்தை எல்லாம் என்னதான் செய்கிறார்கள்? சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரின் குடும்பத்துக்கே இந்த நிலைமை என்றால், திரைக்கு பின் வேலை செய்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்? இப்பொழுதெல்லாம் அரசியலில் உள்ள அரசியலை விட நடிகர் சங்கத்தில் அரசியல் அதிகமாக உள்ளது. இது போதாதென்று அரசியல் கட்சி ஆரமிக்க நடிகர் சங்க தலைவர் பதவியை வைத்து ஒத்திகை பார்த்து கொள்கிறார்கள்.

கலைஞருக்கு முன்னாடி இவங்க தான முதல ராஜாம்பாள் அம்மாளுக்கு ஓடி சென்று உதவி செய்திருக்க வேண்டும்? நடிகர் சங்கத்திலேயே இந்த அழகுல இருக்காங்களே, இவங்க அரசியலுக்கு வந்தா எப்படி ஆட்சி செய்வாங்கனு நீங்களே யோசிச்சி பாருங்க.

Tuesday, July 1, 2008

அரசியல் பயிற்சி பள்ளி

சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?

அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.

இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:

1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.

3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.

4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.

சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.

1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.

2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.

3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!

4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)

5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!

6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.

7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.

8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).

9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.

10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.

11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.

12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.

இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!