Friday, April 25, 2008

ரெண்டே ரெண்டு ஆசைதான்...

சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை.....
சிலருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிட ஆசை...
இன்னும் சிலருக்கு ஒரே கோனில் இரண்டு ஐஸ் க்ரீம் ஸ்கூப் வைத்து சாப்பிட ஆசை...
சிலருக்கு ஒரே மிதிவண்டியை இரண்டு பேர் ஓட்டி செல்ல ஆசை...
இன்னும் சிலருக்கு தனித்தனியாக இரண்டு மிதிவண்டியில் ஜோடியாக செல்ல ஆசை....

சிலருக்கு புகை படத்திற்கு தன் இரண்டு விரலை காட்டி போஸ் கொடுக்க ஆசை...
சிலருக்கு இரண்டு நாய்கள் வளர்க்க ஆசை...சிலருக்கு இரண்டு உறுஞ்சு குழாய் வைத்து குளிர்பானம் குடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு லென்ஸ் வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு கிளாஸில் பீர் ஊற்றி ஒரே கல்ப்பில் அடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு முட்டையுடன் சோறு தின்ன ஆசை...
சிலருக்கு இரண்டு கால் சட்டை அணிந்து கொள்ள ஆசை...

அதே போல் இவர்களின் ஆசையும் ரெண்டே ரெண்டுதான்....உண்ண உணவும், உடுக்க உடையும்!


இது வவாசங்க போட்டிக்கான என்னுடைய இரண்டாவது பதிவு. முதல் பதிவு இங்கே.

Wednesday, April 23, 2008

இரண்டக்க இரண்டக்க...

வவாசங்க இரண்டாவது ஆண்டு விழா போட்டியில கலந்துக்க இரண்டு வாரமா 'இரண்டு மனம் வேண்டும்'னு பாடிகிட்டே யோசிச்சு யோசிச்சு ரொம்ப கொழம்பி போயிட்டேன். கொறஞ்சது இரண்டு பதிவாவது போடனும்னு பார்த்தேன். இதுக்கு மேல யோசிச்சா தலையில இரண்டு முடிதான் இருக்கும். சரி இப்போ இரண்டு நிமிஷம் என் மொக்கைய படிங்க.

சரியா இரண்டு மணிக்கு ரங்கா தன் 2G ரெயின்போ காலனி வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்க மகளிர் கல்லூரியை நோக்கி கிளம்பினான். இரண்டு முப்பதுக்கு மகளிர் கல்லூரி விடும் நேரம். அதனால் கல்லூரி விடும் நேரத்தில் அங்கு போய் நின்று இரண்டு சூப்பர் பிகரையாவது பார்த்து லுக் விட வில்லை என்றால் அவனுக்கு இரவு இரண்டு மணியானாலும் தூக்கம் வராது. இரண்டும் கெட்டாம் வயசு பாருங்க. இவனுக்கு கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு வாரம் ஆவதால், இந்த இரண்டு வாரமாக இதே வேலை தான் இவனுக்கு.

இரண்டு பத்துக்கு அந்த கல்லூரியின் முன் ஆஜராகி விட்டான் ரங்கா. இன்னும் சரியாக இரண்டு பத்து நிமிடம் (அதாங்க இருபது நிமிடம்;) அவன் காத்திருக்க வேண்டும். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கடலை உருண்டையை வாங்கி மென்று கொண்டிருந்தான். கடலை உருண்டை என்றால் அவனுக்கு இரண்டு வயசுல (அட்ரா அட்ரா;) இருந்தே பிடிக்கும்.

சரியாக மணி இரண்டு முப்பது. கல்லூரியில் இரண்டு தடவை மணி அடித்த ஓசை நன்றாக கேட்டது. ரங்கா பக்கத்தில் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் தலை முடியை சரி செய்து கொண்டு ஆவலாக கல்லூரி வாசலையே வழி மேல் தன் இரண்டு விழிகளையும் வைத்து காத்து கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று, நான்கு என்று கும்பல் கும்பலாக மாணவிகள் வெளியில் வர தொடங்கினார். வழக்கம் போல ரங்காவை ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ரங்காவும் சற்றும் சளைக்காமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென நின்று கொண்டிருந்தான்.

பெரும்பாலான மாணவிகள் சென்று விட்டனர். சிறு சிறு இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு பேராக வந்துக்கொண்டிருந்தனர். ரங்கன் இன்னும் மனம் தளரவில்லை. அப்போது கல்லூரி வாயிலில் இருந்து சற்று தொலைவில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு இரண்டு அழகான மாணவிகள் வந்து கொண்டிருப்பதை ரங்கன் கவனித்தான். அவர்களையே சற்று உத்து நோக்கலானான். வாயில் அருகே வந்ததும் அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு ரங்கனை பார்த்தனர்.

ரங்கனுக்கு இரண்டு கையும் ஓடலை, இரண்டு காலும் ஓடலை. அவ்வளவு சந்தோஷம் அவன் மனதுக்குள். அந்த சந்தோஷத்தை அவன் எவ்வளவு கட்டு படுத்த முயன்றும் முடியாமல் அவனது முகம் காட்டிக்கொடுத்தது. அவன் சிரிப்பதை பார்த்த அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சிரித்தனர். அப்படியே பேசிக்கொண்டே ரங்கனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரங்கனுக்கு தலை கால் புரியலை. என்ன செய்வது, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மனது படக் படக் என்று நொடிக்கு இரண்டு முறை அடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

அந்த இரண்டு மாணவிகளும் அவனை மிகவும் நெருங்கி விட்டனர். ரங்கன் ஒரு முடிவு எடுத்தவனை போல் அவர்களிடம் ஏதோ இரண்டு வார்த்தை பேச முயன்றான். அப்போது திடீல் என்று அவன் முதுகில் யாரோ படார் என்று அடித்தனர். காரியம் கை கூடி வரும் வேளையில் சட்டி உடைந்தது போல் ஆகிவிட்டதால் வந்த கோபத்தோடு, 'த்த்த...எவண்டா அது' என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தான் ரங்கன். தனது நெருங்கிய நண்பர்கள் இருவரில் யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரங்கனுக்கு ஒரே அதிர்ச்சி.

பின்னால் நின்று கொண்டிருந்தது அவனது அப்பா. 'இரண்டு வாரமா அம்மா சொல்ற வேலை ஒன்னையும் செய்யாம துரை இதை தான் செஞ்சிகிட்டிருக்கீங்களா?' என்று திட்டிக்கொண்டே தலையில் இரண்டு போட்டு ரங்கனை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.

இந்த கதையில் 'இரண்டு' அல்லது இரண்டு என்று பொருள் தரும் வார்த்தையை எத்தனை முறை உபயோகித்துள்ளேன் என்று சரியாக சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இரண்டே ரெண்டு தான், 'இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொருமைங்க; நீங்க ரொம்ப நல்லவங்க;)'

இது
வவாசங்க போட்டிக்காக எழுதிய கதை அல்ல நிஜம், ஆனால் ரங்கன் நானல்ல...நம்புங்க, நெசமாத்தான் சொல்றேன்!;)

Thursday, April 17, 2008

விஜயகாந்த் ஐந்து வேடங்களில் கலக்கும்...


என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தார். பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு இங்க போட்டுட்டேன்.

நம்ம ஆளுங்களுக்கு கற்பனை குதிரை கன்னா பின்னானு பறக்குது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு. நல்ல வேலை நம்ம கருப்பு எம்.ஜி.ஆர்(அப்படிதான் சொல்லிக்கறாங்க) இதில் போட்டுருக்குற வேடங்களுக்கு சொந்தகாரங்க இப்போ உசுரோட இல்லை. இருந்து இதை பார்த்திருந்தாங்கனா தேவை இல்லாத கொலை பழி கேப்டனுக்கு வந்திருக்கும்.

இந்த போஸ்டரை செஞ்சவங்க உண்மையிலேயே இவர் கட்சி தானா? பின்ன எதுக்கு இவர வச்சு இப்படி காமெடி பண்றாங்க?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இப்பவே கண்ண கட்டுதே! டமிலன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

Tuesday, April 15, 2008

கிரீமி லேயர் தேவையா?

27% இடஒதுக்கீடு சட்டத்தில் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அளவு கோலை அடியோடு நீக்க வேண்டும் என்று ராமதாஸ், திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா போன்றோர் கூறியுள்ளனர்.

என்ன இது புது பிரச்சனை? அட இது புது பிரச்சனை இல்லைங்க. ரொம்ப நாளாவே இருக்கு. இந்த 'கிரீமி லேயர்' என்பது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்ன சமூக நீதி இதனால் பாதிக்கப் படும்? என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த மாதிரி ஒரு நாலு வார்த்தை (சமூக நீதி, இந்திய இறையாண்மை, சட்ட விரோதம்) வச்சுக்கிட்டு அதை கூட சேர்த்து ஒரு அறிக்கை விட்டுடறாங்க. அதனால என்ன பிரச்சனை, எப்படி பாதிப்பு ஏற்படும் அப்படீன்னு விவரமா சொன்னா தானே புரியும்.

கிரீமி லேயர் என்பது பொருளாதார அளவு கோல். அதாவது ஒருவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்திருந்தால் அவர்கள் கிரீமி லேயர் எனப்படும் வட்டத்துக்குள் அடங்குவர். இவர்களால் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இடம் பெற முடியாது. பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை பெற முடியாது. (Creamy Layer definition by Government of India: The Government of India has evolved the criteria for exclusion of certain socially advanced persons/sections from the benefits of reservation available to OBCs in civil posts and services under the Government of India and this is called the "Creamy Layer criteria".)

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் என்னை பொறுத்த வரை இந்த கிரீமி லேயர் என்கிற அளவு கோலும் வரவேற்கத்தக்கது தான். இந்த இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் முன்னேற வேண்டும், சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும், ஏற்ற தாழ்வு மறைய வேண்டும் என்பதற்காகவே வகுக்கப்பட்டது. சமூகத்தில் ஏற்கனவே இந்த அந்தஸ்தை பெற்றவர்களுக்கு எதற்கு இந்த இட ஒதுக்கீடு? ஆக மொத்தத்தில் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்த கிரீமி லேயரில் இல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு தானே கிடைக்கபோகிறது. இது நல்லது தானே?

இந்த இட ஒதுக்கீட்டை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். காசு கொடுத்தா நமக்கு நம்முடைய மரண சான்றிதழே கிடைக்கும். இப்படி இருக்கும் போது இந்த கிரீமி லேயர் சட்டம் இது போல போலி ஜாதி சான்றிதழ் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களை ஓரளவுக்கு தவிர்க்கும் என்பதே என்னுடைய கருத்து.

இதை காரணம் காட்டி தான் வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பை இழந்த முன்னேற்றிய வகுப்பில் உள்ள பலரை பார்த்திருக்கிறேன். அவர்களால் தனியார் கல்லூரியில் படிக்க வசதி இல்லாமல் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஆனால் ஏனோ தானோவென்று படித்து விட்டு மிக குறைவாக மதிப்பெண்கள் பெற்றும் அதே அரசு கல்லூரியில் மிக எளிதாக இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்து விடுவார்கள் பலர். இதை பார்க்கும் பொழுது முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு கோவம் வருவது நியாயம்தான். அதற்கான பதில் தான் இந்த கிரீமி லேயர் என்பது என் கருத்து. இதுக்கு அப்புறமும் அவர்கள் எதிர்த்தால் அது நியாயம் இல்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள் படும் பாடும் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களுக்கு இந்த படிப்பு தான் உயர்வையும், மதிப்பையும் தரும். சிறு வயதில் என் நண்பனின் வீட்டில் நான் உக்கார்ந்த இடத்தை கழுவ சொன்ன என் நண்பனின் பாட்டியை கண்டு மனம் நொந்த அனுபவத்தை நான் இன்னும் மறக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் கிடையாது. எனக்கே இப்படி என்றால் அவர்கள் படும் பாடு எப்படி என்பதை நினைத்தாலே பாவமாக இருக்கும். இன்றைய இளைய தலைமுறையினரால் அந்த நிலைமை மாறி வருகிறது என்பது உண்மை.

Thursday, April 10, 2008

இவங்கள வச்சு வேற என்ன பண்ண முடியும்?

முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?

*****

முதல் நபர்: என்னங்க ஆச்சரியமா இருக்கு? திடீல்னு எதுக்கு கன்னட திரைப்பட துறையினர் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி தர்ணா போராட்டம் அறிவிச்சி இருக்காங்க.
இரண்டாம் நபர்: இதுவும் ஏட்டிக்கு போட்டி தாங்க. இவங்கள நல்லா புரிஞ்சி வச்சு இருக்குற தமிழ் நடிகர்கள் சங்கம், ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி உண்ணா விரதம் இருக்க போறதா சும்மா ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. அதான்.

*****
ஓகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ரஜினி புதியதாக ஒரு மாற்று அறிக்கையை தயார் செய்து இருக்கிறார்:

இது ஒரு வித்யாசமான சந்திப்பு என்று சொல்ல மாட்டேன். மிகவும் அதிகமா பேசி திட்டு வங்கறதும் சுலபம், குறைவாக பேசி திட்டு வங்கறதும் சுலபம். இங்கு பேசியவர்கள் எல்லாரும் உணர்ச்சி இல்லாமல் பேசினார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்க பட்டதுக்கு என் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா பாராட்ட வேண்டாமா?

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க....விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன குஷின்னு சொன்னா, ஒரு தேசிய கட்சி, மிக பெரிய தேசிய கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர், இப்ப வந்து இந்த விஷயத்தை ரிப்பன் கட் பண்ணாம ஆரம்பித்து வைத்திருக்கிறார். என்ன பெருந்தன்மை பாருங்க.

சரி, இப்போ பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். ஒரு பெரிய தலைவர் வந்து இதை ஆதரிக்கிறார். எதுக்கு? நம்ம நல்லதுக்கு தான். அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க. அவங்களும் இந்த மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டாம்?

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன தியாகம் இது. மக்கள் என்ன புத்திசாலிகளா? அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க புத்திசாலிகள் அல்ல...

அரசியல்வாதிகளே பொய்ப் பேசுங்க. உடான்ஸ் விடுங்க. சுயநினைவு இல்லாம பேசுங்க. (வாயில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்...அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.
சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போடாம மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக நல்லது செய்யாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடுங்கள், காவிரி பிரச்சினை மாதிரி. அறிவோட செயல்படாதீங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது கோடலியால் வெட்டினாலும் தீராத பிரச்சனை. இதை இப்போது விட்டுவிட்டு சரியான நேரம் வரும்போது நகத்தால் கிள்ளி எரிந்து விடலாம். இப்பவே, இந்த நிமிஷமே இந்த வேலையை கைவிட வேண்டும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இருக்கு.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்குங்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டிடாதீங்க...

*****
முதல் நபர்: உங்களுக்கு எஸ்.ஜ. சூர்யா பத்தி ஒரு சந்தோஷமான விஷயம் தெரியமா?
இரண்டாம் நபர்: என்ன அவர் இனிமே நடிக்கிறதில்லைனு முடிவு பண்ணிட்டாரா?
முதல் நபர்: இல்ல, அவர் நடிப்புக்காக கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி, தன் வாழ்க்கையையே நமக்காக தியாகம் பண்ணி இருக்கார்.
இரண்டாம் நபர்: அடப்பாவி, இதுவா சந்தோஷமான விஷயம்? அதே தியாகத்த நான் செஞ்சா, அவர் நடிக்கரத நிறுத்திப்பாரா?

Saturday, April 5, 2008

கத்தாழ கண்ணால பாட்டுக்கு சிவாஜி நடனம்

நம்ம நடிகர் திலகம் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கீங்களா? அவர் நிஜமாவே ஆடி இருக்காருங்க. பாபு என்ற படத்துல வர "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா" என்ற பாட்டு தான் எனக்கு தெரிஞ்சி அவர் ஆடுன குத்து பாட்டு. சரியான குட்டு பட்டு அது.

அந்த பாட்ட வச்சு இப்போ வந்துருக்குற கத்தாழ கண்ணால பாட்டோட இணைச்சி ஒரு ரீமிக்ஸ் வீடியோ பண்ணி இருக்கேன். நான் இதுக்கு முன்னாடி பண்ண பாக்யராஜ், விஜயகாந்த் ரீமிக்ஸ் அளவுக்கு இது சரியா வரல இருந்தாலும் ஓகே.





என்ன நேயர்களே! நடிகர் சிவாஜி கணேசன் பங்கு பெற்ற இந்த சிறப்பு ரீமிக்ஸ் வீடியோவை நீங்கலாம் பார்த்து ரொம்பவே ரசிச்சிருப்பீங்க. உங்கள்ல சில பேருக்கு இது புடிச்சி சந்தோஷமா பார்த்துருப்பீங்க. ஒரு சில பேருக்கு இதுவும் புடிக்காம சின்ன வருத்தத்தோடையும், கோவத்தோடையும் பார்த்துருப்பீங்க. நான் வேற என்னங்க சொல்ல போறேன். ப்ளீஸ் இது உங்களுக்கான பதிவு. உங்களால ஓடிகிட்டிருக்க பதிவு. முயற்சி பண்ணுங்க, நிச்சயமா ஒரு நாளைக்கு உங்களுக்கும் இந்த மொக்கை பிடிக்குங்க. இந்த மாதிரி ரீமிக்ஸ் பதிவுகள் அதுத்த மாதமும் தொடரும், உங்களுக்காக. மீண்டும் அடுத்த ரீமிக்ஸ்ஸோட, வேற நாள்ல, வேற நேரத்துல உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வடை சாரி விடை பெறுவது உங்கள் (பெப்சி) சத்தியா.

இதனுடைய யு-டியுப் லிங்க் இங்கே.

தனிமை - ஏப்ரல் 2008 PIT புகைப்படப் போட்டி

தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸாரி சத்தியா மீண்டும் PIT புகைப்படப் போட்டிக்காக தன் படத்தை பதிவிட்டான்;)

காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

போட்டில கலந்துக்குற நாங்கெல்லாம் எங்க படத்த விமர்சனம் செய்ய அந்த நடுவர்கள் கிட்ட முறையிடுவோம், ஆனா அந்த நடுவர்களே களத்துல இறங்குனா, இந்த கத்துகுட்டிகளுக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்;) ரொம்ப பேசிட்டேனோ? ரைட் விடு ஜூட்!

மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Thursday, April 3, 2008

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் - கர்நாடகா தமிழகம் முழுவதும் போராட்டம்

கீழ இருக்கறது எல்லாம் இன்னைக்கு மட்டும் வந்த தலைப்பு செய்திகள். சும்மா இருந்த நம்ம ஆளுங்களும் களத்துல இறங்கிட்டாங்க. கர்நாடக ரக்ஷணவேதிகே அமைப்பினருக்கு நன்றி! எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. காவிரி தண்ணிக்கு பிரச்சனை பண்ணாங்க சரி. ஒகேனக்கல் குடிநீர் திட்டதால அவங்களுக்கு என்ன பதிப்பு இருக்க போகுது? நாம என்ன தான் இங்க பண்ணாலும் அவங்க தண்ணி திறந்து விடறதுல தான எல்லாமே இருக்கு? யாருக்கும் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க.

***********

சென்னையில் நாளை உண்ணாவிரதம் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து நடிகர், நடிகைகள் பங்கேற்க முடிவு. கன்னடர்களுக்கு எதிராக தமிழ் சினிமா உலகினர் போராட்டம்

கன்னடர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்


கன்னட நடிகர்கள் ஏட்டிக்கு போட்டி பெங்களூரில் நாளை தர்ணா போராட்டம் அறிவிப்பு

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகம் முயற்சி பிரதமரிடம் தமிழக அரசு புகார் 'உடனே தலையிட்டு நடவடிக்கை எடுங்கள்


பெங்களூரில் தினத்தந்தி அலுவலக பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு கன்னடர்கள் போராட்டம்


தமிழக பஸ்களில் கருப்பு மை பூசினார்கள் கர்நாடக ரக்ஷணவேதிகே அமைப்பினர் போராட்டம்

மத்திய அரசின் சட்டங்களை மதிக்காமல் செயல்படும் கர்நாடகம் இந்தியாவில் உள்ள மாநிலமா? பிரிக்கப்பட்ட சுதந்திர நாடா? கி.வீரமணி கேள்வி


பாதுகாப்பு வளையத்தில் ரஜினிகாந்த் வீடு. சென்னையில் கன்னடர்கள் நடத்தும் ஹோட்டல்கள் மீது தாக்குதல்

கன்னட நடிகர்களின் தமிழ் படங்களை திரையிட மாட்டோம். தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு


ஹோசூர் அருகே தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம். தமிழக தலைவர்கள் உருவ பொம்மையை எரித்தனர்


கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான சம்பவங்கள்: தமிழர்களின் பொறுமை என்னும் பூட்டை உடைத்து விடாதீர்கள் - விஜய டி ராஜேந்தர் அறிக்கை


***********

இந்த போராட்டம், ஏட்டிக்கு போட்டி இதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு இந்த வீடியோ காட்சி தான் ஞாபகத்துக்கு வந்தது. அதான் உடனே பிடிச்சி போட்டுட்டேன். இது தான் இப்போ தமிழ் நாட்டுலையும், கர்நாடகாவிலும் நடந்துட்டு இருக்கு. யாருக்காக இந்த போராட்டத்த ஆரமிச்சாங்களோ அவங்கள பத்தி கொஞ்சம் கூட கவலை படாம நடந்துகிட்டு இருக்காங்க. இதை மக்கள் நல்லா புரிஞ்சிக்கனும்.


Tuesday, April 1, 2008

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம்

நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம். என்னங்க? ஆச்சரியமா இருக்கா? நீங்க படிக்கறத உங்களாலேயே நம்ப முடியல இல்ல? அப்புறம் எதுக்கு நம்பறீங்க? இந்தியால இருக்குற சுயநல அரசியல்வாதீங்க இருக்கிற வரைக்கும் இது நடக்குற காரியம் இல்ல. இது மாதிரி ஏப்ரல் மாதம் முதல் தேதில, முட்டாள்கள் தினத்துல இந்த மாதிரி செய்திய போட்டு பார்த்துக்க வேண்டியது தான். இல்லனா இந்த பிரச்சனைக்கு தீர்வை என் காலத்துல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

நமக்கு உரிய பங்கு நீரை நாம் திறந்து விட கேட்பதும் அதற்கு அவிங்க மறுப்பதும், மாத்தி மாத்தி வழக்கு போடுறதும், தீர்ப்பு வந்தப்புறம் அதை புறக்கனிக்கறதும் ஒரு தொடர்கதையாவே போயிட்டிருக்கு. இது போதாதுன்னு இப்போ ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் எதிர்ப்பு. ஓகனேக்கலே அவங்களுதாம். என்ன கொடுமை மேடம் (சார் சார்னு எத்தனை வாட்டி எழுதறது, அதான் சினிமா இயக்குனர்கள் சொல்ற மாதிரி முற்றிலும் வித்தியாசமாக மேடம்;) இது? வழக்கம் போல மத்திய அரசு இதை பெருசா கண்டுக்கவே இல்ல.

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. தமிழர்களுக்கு மட்டும் ஏன் நாலா பக்கமும் இடி விழுது? அப்படி என்ன காண்டு நம்ம மேல? வெளிநாடுகளில் இந்தியர்களை மதிக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவர்களை மதிப்பது கிடையாது. தண்ணீர் பிரச்சனையை விட்டுருவோம். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு பஸ்கள் உடைப்பு, கர்நாடகத்துக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் ரத்து, பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீது தாக்குதல், தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்கள் குறி வைத்து தாக்க படுகின்றனர். அவர்களின் உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.

ஏன் இந்த கொலை வெறி? தண்ணி தர முடியாதுன்னா தர முடியாதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி தாக்குதல் நடத்துறதால என்னத்த சாதிக்க போறீங்க? இதை எல்லாம் நினைக்கும் பொழுது "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ தீறுவதெப்போ நம்ம கவலே" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த மாதிரி அடுத்தவங்க கையை எதிர் பார்க்காம, மழை நீர் சேகரித்தல், மரங்கள் வளர்த்தல், குளம் ஏரி தூர் வாருதல், கடல் நீரை குடி நீராக்கல் போன்ற திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் தேவையை நாமாக தீர்த்துக்கொள்ள தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.