Tuesday, April 15, 2008

கிரீமி லேயர் தேவையா?

27% இடஒதுக்கீடு சட்டத்தில் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அளவு கோலை அடியோடு நீக்க வேண்டும் என்று ராமதாஸ், திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா போன்றோர் கூறியுள்ளனர்.

என்ன இது புது பிரச்சனை? அட இது புது பிரச்சனை இல்லைங்க. ரொம்ப நாளாவே இருக்கு. இந்த 'கிரீமி லேயர்' என்பது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்ன சமூக நீதி இதனால் பாதிக்கப் படும்? என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த மாதிரி ஒரு நாலு வார்த்தை (சமூக நீதி, இந்திய இறையாண்மை, சட்ட விரோதம்) வச்சுக்கிட்டு அதை கூட சேர்த்து ஒரு அறிக்கை விட்டுடறாங்க. அதனால என்ன பிரச்சனை, எப்படி பாதிப்பு ஏற்படும் அப்படீன்னு விவரமா சொன்னா தானே புரியும்.

கிரீமி லேயர் என்பது பொருளாதார அளவு கோல். அதாவது ஒருவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்திருந்தால் அவர்கள் கிரீமி லேயர் எனப்படும் வட்டத்துக்குள் அடங்குவர். இவர்களால் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இடம் பெற முடியாது. பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை பெற முடியாது. (Creamy Layer definition by Government of India: The Government of India has evolved the criteria for exclusion of certain socially advanced persons/sections from the benefits of reservation available to OBCs in civil posts and services under the Government of India and this is called the "Creamy Layer criteria".)

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் என்னை பொறுத்த வரை இந்த கிரீமி லேயர் என்கிற அளவு கோலும் வரவேற்கத்தக்கது தான். இந்த இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் முன்னேற வேண்டும், சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும், ஏற்ற தாழ்வு மறைய வேண்டும் என்பதற்காகவே வகுக்கப்பட்டது. சமூகத்தில் ஏற்கனவே இந்த அந்தஸ்தை பெற்றவர்களுக்கு எதற்கு இந்த இட ஒதுக்கீடு? ஆக மொத்தத்தில் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்த கிரீமி லேயரில் இல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு தானே கிடைக்கபோகிறது. இது நல்லது தானே?

இந்த இட ஒதுக்கீட்டை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். காசு கொடுத்தா நமக்கு நம்முடைய மரண சான்றிதழே கிடைக்கும். இப்படி இருக்கும் போது இந்த கிரீமி லேயர் சட்டம் இது போல போலி ஜாதி சான்றிதழ் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களை ஓரளவுக்கு தவிர்க்கும் என்பதே என்னுடைய கருத்து.

இதை காரணம் காட்டி தான் வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பை இழந்த முன்னேற்றிய வகுப்பில் உள்ள பலரை பார்த்திருக்கிறேன். அவர்களால் தனியார் கல்லூரியில் படிக்க வசதி இல்லாமல் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஆனால் ஏனோ தானோவென்று படித்து விட்டு மிக குறைவாக மதிப்பெண்கள் பெற்றும் அதே அரசு கல்லூரியில் மிக எளிதாக இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்து விடுவார்கள் பலர். இதை பார்க்கும் பொழுது முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு கோவம் வருவது நியாயம்தான். அதற்கான பதில் தான் இந்த கிரீமி லேயர் என்பது என் கருத்து. இதுக்கு அப்புறமும் அவர்கள் எதிர்த்தால் அது நியாயம் இல்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள் படும் பாடும் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களுக்கு இந்த படிப்பு தான் உயர்வையும், மதிப்பையும் தரும். சிறு வயதில் என் நண்பனின் வீட்டில் நான் உக்கார்ந்த இடத்தை கழுவ சொன்ன என் நண்பனின் பாட்டியை கண்டு மனம் நொந்த அனுபவத்தை நான் இன்னும் மறக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் கிடையாது. எனக்கே இப்படி என்றால் அவர்கள் படும் பாடு எப்படி என்பதை நினைத்தாலே பாவமாக இருக்கும். இன்றைய இளைய தலைமுறையினரால் அந்த நிலைமை மாறி வருகிறது என்பது உண்மை.

3 comments:

Anonymous said...

பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களில் போதிய நபர்கள் இல்லை என்றால், பொது வகுப்பினரை வைத்து அந்த இடங்களை நிரப்புவதற்கு பதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களை வைத்து நிரப்புவதாக இருந்தால் நான் இதை வரவேற்கிறேன்.

Sathiya said...

@anonymous: பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களே போதிய அளவில் உள்ளனர் என்பது என் கருத்து. எல்லாமே நம்ம அரசியல் வாதிகள் கிட்ட தான் இருக்கு. ஒரு தாசில்தார் கிட்ட இருந்து இந்த 'கிரீமி லேயர்' சான்றிதழ் வாங்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.

மொக்கை நம்பர் ஒன் said...

சபாஷ் .....
'கிரீமி லேயர்' கட்டாயம் தேவை சாதிகள் படிப்பு இரண்டையும் போட்டு குழப்பி
ராமதாஸ், திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா போன்றோர் குளிர் காய்கிறார்கள் இதை நம்பி இந்த அப்பாவி மக்கள் அழிகிறார்கள்
தொடரட்டும் உங்கள் பனி