Thursday, April 10, 2008

இவங்கள வச்சு வேற என்ன பண்ண முடியும்?

முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?

*****

முதல் நபர்: என்னங்க ஆச்சரியமா இருக்கு? திடீல்னு எதுக்கு கன்னட திரைப்பட துறையினர் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி தர்ணா போராட்டம் அறிவிச்சி இருக்காங்க.
இரண்டாம் நபர்: இதுவும் ஏட்டிக்கு போட்டி தாங்க. இவங்கள நல்லா புரிஞ்சி வச்சு இருக்குற தமிழ் நடிகர்கள் சங்கம், ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி உண்ணா விரதம் இருக்க போறதா சும்மா ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. அதான்.

*****
ஓகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ரஜினி புதியதாக ஒரு மாற்று அறிக்கையை தயார் செய்து இருக்கிறார்:

இது ஒரு வித்யாசமான சந்திப்பு என்று சொல்ல மாட்டேன். மிகவும் அதிகமா பேசி திட்டு வங்கறதும் சுலபம், குறைவாக பேசி திட்டு வங்கறதும் சுலபம். இங்கு பேசியவர்கள் எல்லாரும் உணர்ச்சி இல்லாமல் பேசினார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்க பட்டதுக்கு என் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா பாராட்ட வேண்டாமா?

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க....விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன குஷின்னு சொன்னா, ஒரு தேசிய கட்சி, மிக பெரிய தேசிய கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர், இப்ப வந்து இந்த விஷயத்தை ரிப்பன் கட் பண்ணாம ஆரம்பித்து வைத்திருக்கிறார். என்ன பெருந்தன்மை பாருங்க.

சரி, இப்போ பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். ஒரு பெரிய தலைவர் வந்து இதை ஆதரிக்கிறார். எதுக்கு? நம்ம நல்லதுக்கு தான். அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க. அவங்களும் இந்த மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டாம்?

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன தியாகம் இது. மக்கள் என்ன புத்திசாலிகளா? அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க புத்திசாலிகள் அல்ல...

அரசியல்வாதிகளே பொய்ப் பேசுங்க. உடான்ஸ் விடுங்க. சுயநினைவு இல்லாம பேசுங்க. (வாயில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்...அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.
சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போடாம மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக நல்லது செய்யாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடுங்கள், காவிரி பிரச்சினை மாதிரி. அறிவோட செயல்படாதீங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது கோடலியால் வெட்டினாலும் தீராத பிரச்சனை. இதை இப்போது விட்டுவிட்டு சரியான நேரம் வரும்போது நகத்தால் கிள்ளி எரிந்து விடலாம். இப்பவே, இந்த நிமிஷமே இந்த வேலையை கைவிட வேண்டும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இருக்கு.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்குங்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டிடாதீங்க...

*****
முதல் நபர்: உங்களுக்கு எஸ்.ஜ. சூர்யா பத்தி ஒரு சந்தோஷமான விஷயம் தெரியமா?
இரண்டாம் நபர்: என்ன அவர் இனிமே நடிக்கிறதில்லைனு முடிவு பண்ணிட்டாரா?
முதல் நபர்: இல்ல, அவர் நடிப்புக்காக கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி, தன் வாழ்க்கையையே நமக்காக தியாகம் பண்ணி இருக்கார்.
இரண்டாம் நபர்: அடப்பாவி, இதுவா சந்தோஷமான விஷயம்? அதே தியாகத்த நான் செஞ்சா, அவர் நடிக்கரத நிறுத்திப்பாரா?

0 comments: