இந்த விஷயம் ஒரு வாரமா பரபரப்பா தமிழ் நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. மருத்துவ படிப்பு காலத்தை 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து தமிழ் நாட்டுல இருக்க எல்லா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை சில பேர் அரசியலாக்கி ஆதாயம் தேடுறாங்க.
ஆனா உண்மையிலேயே மாணவர்களுக்கு என்ன பிரச்சனை? மருத்துவ படிப்பு காலம் 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்தப்படுவதாக இருந்தால் அவர்களின் போராட்டம் சரியே. ஆனால் உண்மை இதுவல்ல என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், 51/2 ஆண்டு படிப்பு முடிந்த பின் 1 வருடம் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் திட்டமே இது. அதுவும் முதல் 4 மாதம் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அடுத்த 4 மாதம் தாலுகா மருத்துவமனையிலும், கடைசி 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் பணியாற்ற வேண்டும் என்று 'அறிக்கை' தாஸ் (டாக்டர் ராமதாஸ்) சொல்கிறார். இதுல 4 மாதம் மட்டும் தான் கிராமத்தில் பணி புரிய வேண்டுமாம். இத செய்ய இவங்களுக்கு என்னவாம்? இவங்களுக்கு கிராமத்துல கிடைக்கிற அனுபவம் வேற எங்க கிடைக்கும்!
அது மட்டும் இல்லாம ரூ. 8,000 ஊக்கத் தொகையாக வேற தராங்களாம். அப்புறம் என்னங்க பிரச்சனை இவங்களுக்கு? எனக்கு தெரிஞ்சு நிறைய எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டருங்க வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேர் ரொம்ப கம்மியான சம்பளத்துல சின்ன சின்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மெரிட்ல சீட் வாங்கி படிக்க வந்த எந்த மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.பி.எஸ் படிக்க பல லட்சம் பணம் செலவு செய்து விட்டு, படித்து முடித்தவுடன் மேல் படிப்பிற்காக மேலை நாடுகள் செல்ல திட்ட மிட்டிருக்கும் மாணவர்கள் தான் இதை எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.ஏ படிக்க இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்களே, அது போல இவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? இதை விசாரிக்க சாம்பசிவராவ் குழுன்னு ஒன்னு அமைச்சு இருக்காங்களாம். அவங்க பல ஊர்ல கருத்து கேட்டுட்டு இங்க வந்து, தமிழ் நாட்ட தவிர வேற எங்கேயும் இந்த மாதிரி எதிர்ப்பு தெரிவிக்கலைன்னு சொல்றாங்க.
இந்த திட்டம் இன்னும் சட்டமாக கொண்டு வரலை, அதுக்குள்ள எதுக்கு இந்த போராட்டம்? அப்படியே வந்தாலும், அது இனிமே எம்.பி.பி.எஸ் படிக்க வரவங்களுக்கு தானே பொருந்தும்? இதை எல்லாம் முதல்ல அரசாங்கம் தெளிவுப் படுத்தனும். அப்படி தெளிவு படுத்துன பிறகும் இந்த போராட்டம் தொடர்ந்துச்சுனா இந்த பய புள்ளைங்க வேலைக்கு ஆக மாட்டாய்ங்க! இதுல எனக்குத் தெரியாத மறைந்து கிடக்கும் ரகசியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க. கேட்டுக்கறேன்!