Saturday, September 29, 2007

ஸ்வீட்ஸ்...

இப்போவெல்லாம் ஊருக்கு போயிட்டு வரும்போது வீட்டுல கொடுத்து அனுப்புற ஸ்வீட்ஸ் ஒரு வாரம் ஆனாலும் காலி ஆகாம அப்படியே இருக்கு. ஆனா நான் சின்ன புள்ளையா இருந்தப்ப அப்படி இல்ல. அப்ப ஸ்வீட்ஸ்னா எனக்கு உசுரு! எவ்வளவு கொடுத்தாலும் ஒரே நாள் தான்! அப்போ ஸ்வீட்ஸ் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். பண்டிகை நாள் இல்ல விருந்தாளிங்க வந்தாதான். எங்கப்பா வாரத்துல ஒரு நாள் அவருக்கு ஆப்பீஸ்ல கொடுக்குற ஸ்வீட்டையும் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துடுவாரு. அந்த அளவுக்கு ஸ்வீட்னா அலையுவோம். இப்ப நம்மாலயே எவ்வளவு ஸ்வீட் வேணும்னாலும் வாங்கிக்க முடியும், ஆனா சாப்பிட பிடிக்கல. நான் கூட சின்ன வயசுல நம்ம பணம் சம்பாதிச்சா எல்லாம் வந்துடும்னு நினைச்சேன், ஆனால் அப்ப இருந்த அந்த கவலை இல்லாத வாழ்க்கையும் சந்தோஷமும் போயிடும்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிகிட்டேன், உண்மையான சந்தோஷமே மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கிறதுலதான்னு (ரொம்ப மொக்கய போட்டுட்டேனா;)

சரி இப்ப இந்த ஸ்வீட்ஸ்காக சின்ன வயசுல நான் பட்ட கஷ்டத்த எல்லாம் பார்ப்போம்...நீங்க கூட இதெல்லாம் அனுபவிச்சி இருக்கலாம்.

காட்சி 1:

நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வருவாங்க. நானும் யாராச்சும் வந்தா உடனே ஓடி போயி மொதல்ல அவங்க கையில என்ன இருக்குன்னு பார்த்துட்டுதான், அவங்க முகத்தையே பார்ப்பேன். அப்புறம் ஓடி போயி அப்பா கிட்ட சொல்லுவேன்...சிங்காரவேலன் கொண்டமணி மாதிரி "மனோ யாரு வந்துருக்கா பாரு, கருவாடு வந்துருக்கு"னு இல்லங்க!

வந்த விருந்தாளிங்க உடனே என்ன கூப்பிட்டு அவங்க வாங்கிட்டு வந்த ஸ்வீட்ஸ என் கையில கொடுப்பாங்க. நான் உடனே என் அப்பா முகத்த பார்ப்பேன். அப்பா உடனே, "எதுக்குங்க இங்க பார்மாலிடி எல்லாம்?" வந்தவங்க, "இருக்கட்டுங்க. பசங்க இருக்காங்க இல்ல" நானும் உடனே ரொம்ப நல்ல பிள்ளையா, "இல்ல வேண்டாம், இல்ல வேண்டாம்"னு நடிச்சிட்டிருப்பேன். அப்படியே எப்படா அப்பா வாங்கிக்க சொல்லுவாருன்னு அவரு வாயையே பார்த்துகிட்டு இருப்பேன்! அப்பா வாங்கிக்கோன்னு சொன்ன உடனே, கபால்னு வாங்கிப்பேன். அப்படியே நைஸா கொஞ்சம் தள்ளி போய் அத பிரிக்கலாம்னு பார்ப்பேன்...அங்க இருந்து அப்பா என்ன கோபமா ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க...அவ்வளோதான்...கம்னு அத அங்கயே வச்சுடுவேன். மனசுக்குள்ள, "கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிடுச்சே! ஏன்பா, அவங்ககிட்ட பேசறத விட்டுட்டு என் கையில இருக்க ஸ்வீட்ஸயே ஏன் பார்க்குற...அது எனக்கு தான கொடுத்தாங்க?" அப்படீன்னு நெனசிகிட்டு உள்ளே போடுவேன்.

அரைச்ச மாவ எல்லாம் அரைச்சிட்டு வந்தவங்க கிளம்புவாங்க. அப்ப ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அட அட அட...அப்பா அம்மா அவங்கள வழி அனுப்ப வாசலுக்கு போவாங்க, நான் ஸ்வீட்ஸ எடுத்துகிட்டு சமையக்கட்டுக்கு பொயிருவேன்!

காட்சி 2:

இந்த பண்டிகை நாள் வந்தா போதுங்க. எங்கம்மா பெரியம்மா எல்லாம் சேர்ந்து குந்திகின்னு பலகாரம் செய்யவாங்க. அதுவும் விதவிதமாய். அதிரசம், முறுக்கு, சோமாஸ், சீடை, லட்டு, எல்லடை இப்படி பல. ஆனா எங்கள கிட்ட நெருங்க விட மாட்டாங்க. கேட்டா எல்லாம் சாமி் கும்மி்ட்ட அப்புறம் தான்னு சொல்லி விரட்டிடுவாங்க. பாவம் இல்ல நான், இந்த சின்ன பிஞ்சுக்கு அதெல்லாம் எங்க தெரியும்!

நானும் சரி எல்லாம் எங்க போயிடப் போகுது, நம்ம கிட்ட தான வந்தாகனும்னு கம்னு போயிருவேன். வழக்கம் போல பூசை லேட்டாகவே முடியும். பசில காது கீதெல்லாம் அடைச்சிருக்கும். அப்பவும் இந்த பாழாப்போன காக்கா வாய வச்சா தான் சாப்பிடனுமாம். அதுங்க எல்லா வீட்டுலயும் நல்லா மூக்க பிடிக்க தின்னுட்டு நாங்க கூப்பிடும் போது வராதுங்க. அதுங்குள கூப்பிட கத்தி கத்தி இருந்த கொஞ்ச நஞ்ச பிராணமும் போயிடும். (இதுல இன்னொரு விஷயம் சொல்லனும். நான் சின்ன வயசுல தாத்தா/பாட்டி எல்லாம் எங்கனு அம்மாட்ட கேட்டா, அவங்க எல்லாம் சொற்கத்துல இருக்காங்கனு சொல்லுவாங்க. வீட்டுல பேரனோ பேத்தியோ பிறந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி தான்டா வந்து பிறந்திருக்காங்கனு சொல்லுவாங்க. நான் நைட்ல பேய் பிசாச பார்த்து பயந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி எல்லாம் உன்ன சுத்திகிட்டே இருப்பாங்கடா, உன்ன பத்திரமா பார்த்துக்குவாங்கனு சொல்லுவாங்க. இத எல்லாத்த விட இந்த பண்டிகை நாள்ல காக்காய்ங்க வந்து சாப்பிடும் போது ஒரு அண்டங்காக்கா வரும். அத பார்த்தவுடனே உங்க தாத்தா வந்துட்டாருன்னு சொல்லுவாங்க. எங்க தாத்தா எத்தன ஆக்ட் கொடுக்குறாரு பார்த்தீங்களா;)

கடைசியா ஏதாச்சும் ஒரு காக்கா எங்கள பார்த்து பரிதாப பட்டு வந்து வடைய மட்டும் எடுத்துட்டு போகும். உடனே, ஓடு குடு குடுன்னு வீட்டுக்குள்ள. இருக்குற பசில முதல்ல சோத்த கொட்டிக்குவேன். அப்புறம் கொஞ்சமா பலகாரம் சாப்பிடுவேன். மி்ச்சத்த அப்புறம் சாப்பிடலாம்னு விட்டுருவேன். அப்ப எங்கம்மா, பெரியம்மா எல்லாம் திரும்பி ஒன்னு கூடுவாங்க. செஞ்ச பலகாரத்தை எல்லாம் பங்கு பங்கா பிரிப்பாங்க. அத பார்த்தவுடனே எனக்கு தூக்கி வாரி போடும். யாருக்குமான்னு கேட்டா அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கும், சொந்தக்காரவங்களுக்கும்னு சொல்லுவாங்க. அவங்க ஒவ்வொரு பங்கா பிரிக்கும் போதும், அப்படியே அடிச்சிக்கும் என் இதயம், எப்படா நிறுத்துவாய்ங்கன்னு. அப்ப அப்ப கிட்ட போயி இவங்க வீட்டுக்கு எதுக்குமா இவ்வளவு, அவங்க வீட்டுல இரண்டு பேரு தான, அப்படின்னு இப்படின்னு சொல்லி என்னால முடிஞ்ச வரைக்கும் பங்கை குறைப்பேன். ஒரு வழியா எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் போயி பார்த்தா தமாதூண்டு தான் மி்ச்சம் இருக்கும். "ஆஹா, இப்படி நம்ம கதை இலவு காத்த கிளி மாதிரி ஆயிடுச்சே"! இருக்குற ஸ்வீட்ஸ் இரண்டு நாள்ல காலி ஆயிடும். அப்புறம் கிடைக்குற 25 காசு 50 காச வச்சு தேன் மி்ட்டாய் இல்ல பல்லி மி்ட்டாய் வாங்கி தின்னுக்குவேன்! அவ்வ்ங்!

காட்சி 3:

அப்ப எங்க வீட்டுல ஏதோ விஷேசம். சொந்தக்காரவங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதுல சில வாண்டுகளும் உண்டு. ஒரு குட்டி வாண்டு கையில ஏதோ சாக்லேட் வச்சு தின்னுக்கிட்டு இருந்தது. அங்க உட்கார்த்திருந்த சில சொந்தக்காரங்க, "டேய் எங்களுக்கு டா? நீ மட்டும் சாப்பிடற!" அப்படின்னு வழக்கமா சொல்ற டைலாக்க சொல்லி இருக்காங்க. உடனே அந்த வாண்டு ஓடிப் போயி அங்க உட்கார்ந்திருந்த எல்லாருக்கும் சாக்லேட் வாங்கியாந்து கொடுத்துட்டான்.

இதெல்லாம் எதுவும் தெரியாம நான் உள்ள நுழையறேன். உடனே அங்கிருந்த சொந்தக்காரங்கள்ல ஒருத்தவங்க என்ன பார்த்து, "டேய் பார்த்தியா? நீயும் இருக்கியே. எப்பவாவது எங்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கியா? குழந்தய பாரு கேட்ட உடனே வாங்கியாந்து கொடுத்துட்டான்". எனக்கா சரியான கடுப்பு. அந்த வாண்ட பார்த்து முறைச்சிக்கிட்டே, "டேய், எனக்குடா சாக்லேட்டு?"அவன் குடு குடுன்னு ஓடறான். பின்னாலயே நானும் ஓடினேன். நேரா என் ரூமுக்குள்ள போறான். எனக்கு ஒன்னும் புரியல. என் ரூமுக்கு எதுக்கு போறான்னு ஒரே குழப்பம். போனவன் என் கப்போர்ட திறந்து என் உண்டிய எடுத்தான். அத தல கீழ கவுத்து குச்சி வச்சு நோண்டி காச எடுத்தான். (இந்த உண்டில தான் நான் அப்ப அப்ப ஸ்வீட் வாங்கி சாப்பிட காசு சேர்த்து வைப்பேன்:( காச எடுத்தவன் நேரா வீட்டு கோடியில இருக்க கடைக்கு போயி சாக்லேட் வாங்கியாந்து என் கிட்டயே கொடுத்தான். உடனே என் சொந்தக்காரங்க எல்லாம் திரும்பவும் அவன புகழ்ந்து தள்ளிட்டாங்க. எனக்கு வந்துச்சே கோவம்....அப்படியே ராசா...எப்படி ராசா இதெல்லாம்னு கேட்டு கிட்டே அவன அப்படியே தூக்கிகிட்டு வீட்டு மொட்டை மாடிக்கு போயிட்டேன். அப்புறம் என்ன...கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ தான்.