Showing posts with label பொது சிந்தனை. Show all posts
Showing posts with label பொது சிந்தனை. Show all posts

Thursday, June 19, 2008

செய்தித்தாளின் முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

ஆறாம் வகுப்பு படிக்கிற பையன் ஒருவன் அப்துல் கலாமை பார்த்து கேட்டான், "நம்ம ஊர் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் எப்பொழுதும் கெட்ட செய்திகளையே போடுகிறார்கள். நல்ல செய்திகள் எல்லாம் எங்காவது மூலையில் சிறியதாக போடுகிறார்கள். ஏன் இப்படி?" என்று.


அதற்கு அப்துல் கலாம், "கெட்ட செய்தி என்பது மிகவும் பரபரப்பானது. அதே பரபரப்பு நல்ல செய்திகளில் இருப்பதில்லை" என்று கூறினார். (Bad news is sensational, whereas good news does not bring about sensational.) ஆனால் இந்நிலைமை மாறி வருவதாக கலாம் தெரிவித்தார்.

எனக்கு என்னமோ இது மாறும் என்று தோணவில்லை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நானும் என் அலுவலக நண்பரும் வேலை முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தோம். அப்பொழுது அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஏதோ செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் நின்று பார்த்து கொண்டிருந்தனர். ஏதோ விமானத்தை பற்றிய செய்தி அது. அதை கவனித்த என் நண்பர் அருகே சென்று என்ன செய்தி என்று கவனித்தார். கவனித்தவர், உடனே என்னிடம் திரும்பி வந்து, "ச்சே! ஏதோ புது விமானம் விட்டிருக்கிறார்களாம். நான் ஏதோ விபத்து என்று நினைத்தேன். வா போலாம்" என்று சொன்னார். அதற்கு நான், ஏன்யா! யாராச்சும் செத்தா தான் நின்னு பாப்பீங்களானு? கேட்டதுக்கு தன் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி விட்டு சென்றார்.

இப்படி இருக்குற நம்ம கிட்ட, நல்ல செய்திய முதல் பக்கத்துல போட்டா எப்படிங்க விற்க முடியும்? இது நம்ம நாட்டுல மட்டும் இல்லைங்க. எல்லா நாட்டுலையும் இதே தான் நடக்குது. அதே போல் இது இன்னைக்கு நேத்து ஆரமித்ததில்லை, அந்த காலத்துல இருந்தே நடந்துட்டு வர்றது தான். இங்கே நான் போட்டிருக்குற படத்துல உள்ள எடுத்துகாட்டு கொஞ்சம் அதிகம் தான், ஏன்னா அந்த சமயத்துல செய்தித்தாள் முழுவதுமே அதை பற்றி தான் இருந்திருக்கும்.

அந்த மாதிரி நாட்டுக்கு முக்கியமான செய்தின்னா கூட பரவா இல்லைங்க. இப்போ வர தலைப்பு செய்திகள் சில:

1. கணவனை தேன்நிலவுக்கு அழைத்து சென்று தன் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி.

2. சொந்த மனைவியையே வெட்டி கொன்ற கணவன்.

இப்படி எல்லாம் வருதுங்க. அதுவும் இரத்தம் படிந்த புகைப்படத்துடன். சொன்னா நம்ப மாட்டீங்க, மேல நான் சொல்லி இருக்குற எடுத்துகாட்டில் முதல் செய்தி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த செய்தி வந்த சமயத்துல எங்க ஏரியாவில் செய்திதாள்களுக்கு தட்டுப்பாடு. வந்த கொஞ்ச நேரத்துலையே எல்லா கடையிலையும் செய்தித்தாள்கள் தீர்ந்துவிட்டது. இப்போ சொல்லுங்க முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

Friday, May 2, 2008

திருநங்கைகள்

விஜய் டிவில 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சி பார்த்தேன். ரொம்பவே உருக்கமா இருந்துச்சு. குறிப்பா நான் சொல்றது ரோஸ் திருநங்கைகளோட ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்களே அதை பத்தி தான். நீங்க அதை பார்க்கலைன்னா இங்க போயி பாருங்க (இது ஒரு பகுதி தான். மத்த பகுதி எல்லாம் அங்கேயே இருக்கும்).

இதுல பேசுன ஒவ்வொரு திருநங்கைகளோட திறமைகளை பார்க்கும் போது ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இவங்கள்ல பல பேர் ரொம்ப நாளாவே வலைப்பதிவு ஆரமிச்சி எழுதிட்டு வராங்கன்றதும் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. உண்மைய சொல்ல போனா இவங்களுக்கு திருநங்கைகள்னு ஒரு பேரு இருக்குன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன். எல்லாரையும் போல நானும் உஸ்ஸ், ஒன்பது, அலி அப்படீன்னு தான் சொல்லுவேன். ஆனா இந்த நிகழ்ச்சிய பார்த்ததுக்கப்புறம் இந்த மாதிரி எல்லாம் கூப்பிட வாய் வர மாட்டேங்குது.

நான் ஹைதராபாத்ல வேலை பார்க்கும் பொழுது அடிக்கடி சார்மினார் இல்ல சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல சென்னை வருவேன். ஹைதராபாத்ல ரயில் ஏறும்போதே ஒரு பத்து ரூபாயை எடுத்து பாக்கெட்ல வச்சுக்குவேன். ஏன்னா ரயில் கிளம்பி கொஞ்ச நேரத்துல ஒரு நாலு, அஞ்சு திருநங்கைகள் காசு வாங்க வருவாங்க. காசு கம்மியா கொடுத்தாலும் சரி, இல்ல கொடுக்கவே இல்லைனாலும் சரி ஏதாச்சும் திட்டுவாங்க. நமக்கு தர்ம சங்கடமா ஆயிடும். இதுக்காகவே முதல காச கொடுத்து அனுப்பிடறது.

இந்த மாதிரி எல்லாம் இவங்கள்ல சில பேர் செய்யறதால இவங்கள ஒட்டு மொத்தமா ஒதுக்கறது நியாயம் இல்ல. நாம் அவர்களை நடத்தும் விதம் கூட அவர்களை இப்படி மாற்றி விட்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அப்பவெல்லாம் இவங்கள பத்தி ஏதாச்சும் யோசிச்சிகிட்டே இருப்பேன். இவங்க ஏன் இப்படி செய்யறாங்க. இவங்களுக்கு குடும்பம் இல்லையா? ஒரு குடும்பத்துல இவங்கள மாதிரி யாராச்சும் பிறந்தாங்கனா என்ன செய்வாங்க? சமுதாயத்துல அனாதைகள், ஊனமுற்றவர்கள் இப்படி யார பார்த்தாலும் நாம பரிதாப படறோம், ஆனா இவங்கல பார்த்து மட்டும் யாருமே ஏன் பரிதாப மாட்டறாங்க? இவங்களுக்கு வாழ வேற வழியே இல்லையா? அப்படி இவங்களுக்கு உடல் ரீதியா என்ன குறை பாடு? இப்படி பல கேள்விகள் எனக்குள் ஓடும். இதெற்கெல்லாம் எனக்கு இந்த 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் விடை கிடைத்தது. விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நம் சமுதாயத்தில் நாம் இவர்களை அருவெறுப்பாக பார்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சினிமாவில் கூட இவர்களை கேலிக்கூத்தாக தான் காண்பிக்கிறார்கள். இதில் மிகவும் வருந்தத்தக்கது தென் இந்தியாவில் தான் இவர்களை மிகவும் கேவலமாக நடத்துவதாக இவர்களே சொல்கிறார்கள். வட நாட்டில் இவர்களுக்கு மரியாதை தருகிறார்களாம். இது நான் சற்றும் எதிர் பார்க்காத விஷயம். இவர்களை நாம் மனிதர்கள் என்று கூட ஏற்றுக்கொள்வது இல்லை. நமது அரசாங்கம் கூட இவர்களுக்கு எதுவும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இவர்களுக்கு வெளிநாடுகளில் கொடுக்கப்படும் மரியாதையே வேறு. நான் ஸ்டார் க்ரூஸ் என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த போது இவர்களை வைத்து ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தினர். இவர்களை தாய்லாந்து நாட்டின் 'லேடிபாய்ஸ்' என பெருமையாக அறிமுகப்பதுத்தினர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் நாம் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இது போல் அங்கீகாரம் இவர்களுக்கு நம்மூரில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.


இதுவரை நான் இவர்களில் ஒருவரை கூட நேரில் அழுது பார்த்ததில்லை. அத்தனை கவலைகளையும் தங்கள் மனதில் போட்டு புதைத்து கொண்டு வாழ்கிறார்கள். என்னதான் இவர்கள் ஆபரேஷன் செய்துக் கொண்டு பெண்ணாய் மாறினாலும், இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. இவர்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாது. பெண் மனம் கொண்டுள்ளதால் உடலை மட்டும் பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இதில் இவர்களின் தவறு எதுவும் இல்லை. இவர்களை படைத்த அந்த ஆண்டவனின் தவறு. இதை சரி செய்ய இது வரை வழி எதுவும் இல்லை. இப்படி இவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமும் இவர்களை நோகடிக்காமல், இருபாலினர்களைப் பற்றி நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் மேல் நாடுகள் போல, இவர்களும் நம் நாட்டில் சமூகத்தில் கெளரவமாய் வாழலாம்.


இதை வவாசங்க போட்டிக்காக எழுதவில்லை, இருந்தாலும் இதுவும் அந்த போட்டிக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Friday, April 25, 2008

ரெண்டே ரெண்டு ஆசைதான்...

சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை.....
சிலருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிட ஆசை...
இன்னும் சிலருக்கு ஒரே கோனில் இரண்டு ஐஸ் க்ரீம் ஸ்கூப் வைத்து சாப்பிட ஆசை...
சிலருக்கு ஒரே மிதிவண்டியை இரண்டு பேர் ஓட்டி செல்ல ஆசை...
இன்னும் சிலருக்கு தனித்தனியாக இரண்டு மிதிவண்டியில் ஜோடியாக செல்ல ஆசை....

சிலருக்கு புகை படத்திற்கு தன் இரண்டு விரலை காட்டி போஸ் கொடுக்க ஆசை...
சிலருக்கு இரண்டு நாய்கள் வளர்க்க ஆசை...சிலருக்கு இரண்டு உறுஞ்சு குழாய் வைத்து குளிர்பானம் குடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு லென்ஸ் வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு கிளாஸில் பீர் ஊற்றி ஒரே கல்ப்பில் அடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு முட்டையுடன் சோறு தின்ன ஆசை...
சிலருக்கு இரண்டு கால் சட்டை அணிந்து கொள்ள ஆசை...

அதே போல் இவர்களின் ஆசையும் ரெண்டே ரெண்டுதான்....உண்ண உணவும், உடுக்க உடையும்!


இது வவாசங்க போட்டிக்கான என்னுடைய இரண்டாவது பதிவு. முதல் பதிவு இங்கே.

Tuesday, April 1, 2008

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம்

நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம். என்னங்க? ஆச்சரியமா இருக்கா? நீங்க படிக்கறத உங்களாலேயே நம்ப முடியல இல்ல? அப்புறம் எதுக்கு நம்பறீங்க? இந்தியால இருக்குற சுயநல அரசியல்வாதீங்க இருக்கிற வரைக்கும் இது நடக்குற காரியம் இல்ல. இது மாதிரி ஏப்ரல் மாதம் முதல் தேதில, முட்டாள்கள் தினத்துல இந்த மாதிரி செய்திய போட்டு பார்த்துக்க வேண்டியது தான். இல்லனா இந்த பிரச்சனைக்கு தீர்வை என் காலத்துல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

நமக்கு உரிய பங்கு நீரை நாம் திறந்து விட கேட்பதும் அதற்கு அவிங்க மறுப்பதும், மாத்தி மாத்தி வழக்கு போடுறதும், தீர்ப்பு வந்தப்புறம் அதை புறக்கனிக்கறதும் ஒரு தொடர்கதையாவே போயிட்டிருக்கு. இது போதாதுன்னு இப்போ ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் எதிர்ப்பு. ஓகனேக்கலே அவங்களுதாம். என்ன கொடுமை மேடம் (சார் சார்னு எத்தனை வாட்டி எழுதறது, அதான் சினிமா இயக்குனர்கள் சொல்ற மாதிரி முற்றிலும் வித்தியாசமாக மேடம்;) இது? வழக்கம் போல மத்திய அரசு இதை பெருசா கண்டுக்கவே இல்ல.

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. தமிழர்களுக்கு மட்டும் ஏன் நாலா பக்கமும் இடி விழுது? அப்படி என்ன காண்டு நம்ம மேல? வெளிநாடுகளில் இந்தியர்களை மதிக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவர்களை மதிப்பது கிடையாது. தண்ணீர் பிரச்சனையை விட்டுருவோம். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு பஸ்கள் உடைப்பு, கர்நாடகத்துக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் ரத்து, பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீது தாக்குதல், தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்கள் குறி வைத்து தாக்க படுகின்றனர். அவர்களின் உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.

ஏன் இந்த கொலை வெறி? தண்ணி தர முடியாதுன்னா தர முடியாதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி தாக்குதல் நடத்துறதால என்னத்த சாதிக்க போறீங்க? இதை எல்லாம் நினைக்கும் பொழுது "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ தீறுவதெப்போ நம்ம கவலே" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த மாதிரி அடுத்தவங்க கையை எதிர் பார்க்காம, மழை நீர் சேகரித்தல், மரங்கள் வளர்த்தல், குளம் ஏரி தூர் வாருதல், கடல் நீரை குடி நீராக்கல் போன்ற திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் தேவையை நாமாக தீர்த்துக்கொள்ள தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Monday, August 27, 2007

அஞ்சலி!

இது போன்ற சம்பவங்கள் சில அடிஅடிக்கடி நடந்து நமக்கு மரணம் தவிற்கமுடியாதது என்பதை நினைவூட்டுகிறது. இது வரை வடக்கில் தான் இது போன்ற குண்டு வெடிப்புகள் நடைபெரும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி ஆகும். நமது தமி்ழ் நாட்டிலும் இது நடைபெறக்கூடும்.

நான் சுற்றித்திறிந்த இடத்தில் குண்டு வெடித்ததை அறிந்து அடைந்த பீதியை விட, அதில் சிக்கி மாண்டவரின் விதியை நினைக்கும் பொழுது ஏற்படும் மனத்துயரம் மேலோங்கி நிற்கிறது!


எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது சரிதான். இது போன்று பற்பலச் சம்பவங்கள் இன்றும் கேஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு வெறும் செய்தியாகத்தான் இருக்கின்றன. மரணம் நம்மை எப்பொழுதும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. அது எக்கணமும் நம்மை வந்து கவ்விக்கொள்ளும், ஆகையால் சற்று கவனமாக இருப்பீர்களாக!

புனிதப்போர் என்று சொல்லி இப்படி பொது மக்களை கொன்று குவிக்கும் இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் தங்களின் இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர் தம் குடும்பத்திற்கு ஆண்டவன் ஆறுதலை வழங்கட்டும்.