Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, April 23, 2008

இரண்டக்க இரண்டக்க...

வவாசங்க இரண்டாவது ஆண்டு விழா போட்டியில கலந்துக்க இரண்டு வாரமா 'இரண்டு மனம் வேண்டும்'னு பாடிகிட்டே யோசிச்சு யோசிச்சு ரொம்ப கொழம்பி போயிட்டேன். கொறஞ்சது இரண்டு பதிவாவது போடனும்னு பார்த்தேன். இதுக்கு மேல யோசிச்சா தலையில இரண்டு முடிதான் இருக்கும். சரி இப்போ இரண்டு நிமிஷம் என் மொக்கைய படிங்க.

சரியா இரண்டு மணிக்கு ரங்கா தன் 2G ரெயின்போ காலனி வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்க மகளிர் கல்லூரியை நோக்கி கிளம்பினான். இரண்டு முப்பதுக்கு மகளிர் கல்லூரி விடும் நேரம். அதனால் கல்லூரி விடும் நேரத்தில் அங்கு போய் நின்று இரண்டு சூப்பர் பிகரையாவது பார்த்து லுக் விட வில்லை என்றால் அவனுக்கு இரவு இரண்டு மணியானாலும் தூக்கம் வராது. இரண்டும் கெட்டாம் வயசு பாருங்க. இவனுக்கு கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு வாரம் ஆவதால், இந்த இரண்டு வாரமாக இதே வேலை தான் இவனுக்கு.

இரண்டு பத்துக்கு அந்த கல்லூரியின் முன் ஆஜராகி விட்டான் ரங்கா. இன்னும் சரியாக இரண்டு பத்து நிமிடம் (அதாங்க இருபது நிமிடம்;) அவன் காத்திருக்க வேண்டும். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கடலை உருண்டையை வாங்கி மென்று கொண்டிருந்தான். கடலை உருண்டை என்றால் அவனுக்கு இரண்டு வயசுல (அட்ரா அட்ரா;) இருந்தே பிடிக்கும்.

சரியாக மணி இரண்டு முப்பது. கல்லூரியில் இரண்டு தடவை மணி அடித்த ஓசை நன்றாக கேட்டது. ரங்கா பக்கத்தில் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் தலை முடியை சரி செய்து கொண்டு ஆவலாக கல்லூரி வாசலையே வழி மேல் தன் இரண்டு விழிகளையும் வைத்து காத்து கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று, நான்கு என்று கும்பல் கும்பலாக மாணவிகள் வெளியில் வர தொடங்கினார். வழக்கம் போல ரங்காவை ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ரங்காவும் சற்றும் சளைக்காமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென நின்று கொண்டிருந்தான்.

பெரும்பாலான மாணவிகள் சென்று விட்டனர். சிறு சிறு இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு பேராக வந்துக்கொண்டிருந்தனர். ரங்கன் இன்னும் மனம் தளரவில்லை. அப்போது கல்லூரி வாயிலில் இருந்து சற்று தொலைவில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு இரண்டு அழகான மாணவிகள் வந்து கொண்டிருப்பதை ரங்கன் கவனித்தான். அவர்களையே சற்று உத்து நோக்கலானான். வாயில் அருகே வந்ததும் அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு ரங்கனை பார்த்தனர்.

ரங்கனுக்கு இரண்டு கையும் ஓடலை, இரண்டு காலும் ஓடலை. அவ்வளவு சந்தோஷம் அவன் மனதுக்குள். அந்த சந்தோஷத்தை அவன் எவ்வளவு கட்டு படுத்த முயன்றும் முடியாமல் அவனது முகம் காட்டிக்கொடுத்தது. அவன் சிரிப்பதை பார்த்த அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சிரித்தனர். அப்படியே பேசிக்கொண்டே ரங்கனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரங்கனுக்கு தலை கால் புரியலை. என்ன செய்வது, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மனது படக் படக் என்று நொடிக்கு இரண்டு முறை அடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

அந்த இரண்டு மாணவிகளும் அவனை மிகவும் நெருங்கி விட்டனர். ரங்கன் ஒரு முடிவு எடுத்தவனை போல் அவர்களிடம் ஏதோ இரண்டு வார்த்தை பேச முயன்றான். அப்போது திடீல் என்று அவன் முதுகில் யாரோ படார் என்று அடித்தனர். காரியம் கை கூடி வரும் வேளையில் சட்டி உடைந்தது போல் ஆகிவிட்டதால் வந்த கோபத்தோடு, 'த்த்த...எவண்டா அது' என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தான் ரங்கன். தனது நெருங்கிய நண்பர்கள் இருவரில் யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரங்கனுக்கு ஒரே அதிர்ச்சி.

பின்னால் நின்று கொண்டிருந்தது அவனது அப்பா. 'இரண்டு வாரமா அம்மா சொல்ற வேலை ஒன்னையும் செய்யாம துரை இதை தான் செஞ்சிகிட்டிருக்கீங்களா?' என்று திட்டிக்கொண்டே தலையில் இரண்டு போட்டு ரங்கனை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.

இந்த கதையில் 'இரண்டு' அல்லது இரண்டு என்று பொருள் தரும் வார்த்தையை எத்தனை முறை உபயோகித்துள்ளேன் என்று சரியாக சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இரண்டே ரெண்டு தான், 'இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொருமைங்க; நீங்க ரொம்ப நல்லவங்க;)'

இது
வவாசங்க போட்டிக்காக எழுதிய கதை அல்ல நிஜம், ஆனால் ரங்கன் நானல்ல...நம்புங்க, நெசமாத்தான் சொல்றேன்!;)

Tuesday, December 18, 2007

விதி!

காலையில் காப்பீடு முகவர்(இன்சூரன்ஸ் ஏஜென்ட்) வந்து பேசிவிட்டு போனதில் இருந்து ராஜனுக்கு மனது என்னவோ போல் இருந்தது. அலுவலகத்தில் ஒழுங்காக வேலை கூட செய்ய முடியவில்லை அவனால். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

ராஜனுக்கு வயது ஐம்பது ஆகிறது. அவன் ஒவ்வொரு மாதமும் வாங்குற சம்பளத்தில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் போக அவனால் இதுவரை வேறு எதுவும் செய்ய முடிந்ததில்லை. அவனுக்கு பதினைந்து வயதில் ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிக்க வைத்து ஒரு டாக்டராக ஆக்க வேண்டும் என்பதே ராஜனுக்கும் அவனது மனைவிக்கும் கனவாக இருந்தது. அதற்காக தங்களுக்கென இவர்கள் எதுவும் செய்து கொண்டதே இல்லை. சினிமா, சுற்றுலா என இவர்கள் வெளியில் சென்று பல வருடங்கள் ஓடிவிட்டன. தங்கள் மகளை அவளது பள்ளியில் எங்காவது சுற்றுலா கூட்டி சென்றால் மறுக்காமல் அனுப்பி விடுவார்கள். இதனாலேயே ராஜன் காப்பீடு முகவர்கள் யார் அவனிடம் வந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான். இம்முறை நண்பர் ஒருவர் அனுப்பியதால் அவனால் மறுக்க முடியவில்லை. அவர் வந்து சென்ற பின் அந்த முகவர் கூறிய சில வார்த்தைகள் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

"என்ன சார் நீங்க. ஐம்பது வயசாகுது. இன்னும் ஒரு இன்சூரன்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்றீங்க. திடீல்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க மனைவி மகளை யார் காப்பாற்றுவார்கள்?" இதான் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

தன் மகளை விட தனது மனைவியைப் பற்றியே, அவன் முழு சிந்தனையும் இருந்தது. "எனக்காகவே வாழ்ந்து கிட்டு இருக்காளே? நான் இல்லைன்னா என்ன செய்வா? அவளுக்குன்னு நான் பெருசா ஒண்ணுமே பண்ணதில்லை. இருந்தாலும் எவ்வளவு அழகா குடும்பத்த நடத்துறா. எனக்கு என் உயிர் மீது ஆசை இல்லைன்னாலும், என் சீதாவுக்கு நான் தானே உயிர். அவளுக்கு ஒண்ணுமே செய்யாம நான் போயிட்டா அவ என்ன கஷ்டபடுவா? என்னை விட என் சீதாவ யார் நல்லா பார்த்துக்குவா? என்னால நெனச்சி கூட பார்க்க முடியலே!" இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே அவனது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அன்று மதியம் சாப்பிடக்கூட செல்லவில்லை ராஜன்.

ஒரு வழியாக அன்று வேலை முடிந்து தன் சக ஊழியர்களுடன் வீடு நோக்கி நடை போடுகிறான். அவனுக்குள் அந்த சிந்தனைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. "இத்தனை நாள் இல்லாமல் ஏன் நமக்கு திடீல் என்று இந்த பயம்? உடல் முதுமை அடைய அடைய மனம் தானாக தளர்ச்சி அடைகிறது என்பது உண்மை தான். என்னால் என் முதுமையை உணர முடிகிறது. அந்த முகவர் சொன்னது போல் ஏதாவது ஆகிவிட்டால்? இல்லை அதற்குள் கண்டிப்பாக என் சீதாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் இல்லைனா பாவம் அவ என்ன செய்வா? அவளுக்கு என்னையும் மகளையும் தவிர வேறு ஒண்ணுமே தெரியாதே. அவளுக்கு அம்மா அப்பா அல்லது கூட பிறந்தவர்கள் யாராச்சும் இருந்தாலும் பரவா இல்லை. அவளுக்கு உலகமே நாங்க இரண்டு பேரும் தானே. இப்போ தான் புரிகிறது எதற்கு அவள் அடிக்கடி எனக்கு முன்னால் சுமங்கலியாக சென்று விட வேண்டும் என்று கூறுவாள் என்று. வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அந்த முகவரிடம் பேச வேண்டும்" என்று நினைத்துக்கொண்டே வீட்டை அடைகிறான்.

வீட்டினுள்ளே அடி எடுத்து வைக்கும் நேரம் தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் சென்று எடுப்பதற்குள் அவனது மகள் ஓடி வந்து பேசுகிறாள். எதையோ கேட்டவள், திடீர் என்று தொலைபேசியை அப்படியே போட்டு விட்டு தன் தந்தை அருகில் நிற்பது சற்றும் தெரியாதவளாய் அழுதுகொண்டே அலறுகிறாள், "அம்மா! அப்பா ஆபீஸ்ல இருந்து வர வழில நெஞ்சு வலி வந்து சூர்யா ஹாஸ்பிடல்ல ICUல இருக்காராம் மா!"

(சின்னதா ஒரு நப்பாசை! அதான் சர்வேசன் போட்டிக்காக என் வாழ்கையில எழுதுன முதல் கதை!)