ஆந்திராவில் நடந்த தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 294 தொகுதிகளில் வெறும் 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.
இவர் தோல்வியை இவரது ரசிகர்களே பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி உள்ளனர். ஏனென்றால் இவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கு முன்பே சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு மூன்று முதல் ஐந்து கோடி வரை வாங்கி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒவ்வொரு தோற்றுப்போன கட்சியும் கண்ணா பின்னாவென்று யோசித்து கொண்டிருக்க, இவர் மட்டும் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார்.
அவர் தோல்விக்கான காரணம் பற்றி அறிய 10 வாஸ்து ஜோதிட நிபுணர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கட்சி அலுவலகம் முழுவதும் பார்வையிட வைத்திருக்கிறார். அவர்கள் சிரஞ்சீவியிடம், நீங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த வழியை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பின்புற வழியை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே வாஸ்து நிபுணர்கள் அவரிடம், முதலில் பின்புற வழியை அடைத்து விடுங்கள். நீங்கள் கட்சி அலுவலகத்தில் பின்புற வழியை பயன்படுத்தியது தான் தோல்விக்கு காரணம். இனி நீங்கள் முன்புற வழியை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்றனர். மேலும் அலுவலகத்தில் சிரஞ்சீவி அமரும் திசைகளையும் மாற்றினர். மேலும் அவரைப்பார்க்க வரும் தொண்டர்கள் காத்திருக்கும் அறையிலும் சிறிது மாற்றம் செய்தனர். பின்னர் வாஸ்து நிபுணர்கள் சிரஞ்சீவி அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டை சரி செய்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளனர். அடப்பாவீங்களா!
நல்ல வேளை ஆந்திரால ஒரு கண்ணகி சிலை இல்லை. இருந்திருந்தா இன்னொரு புது பிரச்சனை வந்திருக்கும் போல! எதற்கும் கையை நீட்டிட்டு நிக்கிற மாதிரி ஏதாச்சும் என்.டி.ஆர். சிலை இருக்கானு பாருங்க. என்ன இருந்தாலும் நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதை கவனிக்கவும். உங்க அலுவலகத்தில் கூட வாஸ்து பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அட உங்க அலுவலகத்தை தான் பாதி இடிச்சிபுட்டாங்களே...ஒரு வேளை அது தான் காரணமோ? நல்லா பிளான் பண்ணி தான்யா செஞ்சிருக்காய்ங்க!
Thursday, May 21, 2009
நடிகர் சிரஞ்சீவி தேர்தலில் தோற்றது ஏன்?
Posted by Sathiya at 10:21 PM 3 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம்
Thursday, July 24, 2008
சிங் இஸ் கிங்
இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.
சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.
அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.
மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.
**********
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.
இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?
**********
இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.
**********
இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.
**********
இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?
**********
இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?
**********
அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.
Posted by Sathiya at 10:17 PM 9 comments
Labels: Nation, Political Views, அரசியல், நாட்டு நடப்பு
Saturday, July 5, 2008
அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்
அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.
இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.
அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?
Posted by Sathiya at 12:48 AM 10 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம், நாட்டு நடப்பு
Friday, July 4, 2008
ஆஹா! இவர்களும் பெண்கள் தானா?

(Picture Courtesy: Daily Thanthi)
விஷ்வ ஹிந்து பரிஷத் நேற்று நடத்திய பந்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இந்த படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது, அந்த வாகனத்தில் உள்ளவருக்கும் பந்த்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று. அவர் போது மக்களில் ஒருவர். அவரை போட்டு அடிப்பதாலும், கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பதாலும் இவர்கள் நடத்தும் பந்த் வெற்றி அடைந்து விடுமா?
இப்படி பட்ட காரியங்களினால் மக்களிடத்தில் அவர்கள் மதிப்பு இறங்கிவிடுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்காது. சரி தானே? இவர்கள் கடையை அடைக்க சொன்னதால் ஒரு கடைக்காரர் தீக்குளித்து வேறு இருக்கிறார்.
பெண்களே இப்படி வன்முறையில் ஈடுபட்டால், அப்பப்பா! நம்ம நாட்டை நினைச்சா பயமா இருக்குதுங்க!
Posted by Sathiya at 7:10 PM 12 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம், நாட்டு நடப்பு, நிகழ்வுகள்
Tuesday, July 1, 2008
அரசியல் பயிற்சி பள்ளி
சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?
அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.
இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:
1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.
3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.
4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.
சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.
1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.
2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.
3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!
4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)
5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!
6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.
7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.
8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).
9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.
10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.
11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.
12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.
இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!
Posted by Sathiya at 1:54 PM 8 comments
Labels: Comedy, Nation, Political Views, அரசியல், நகைச்சுவை
Tuesday, June 3, 2008
அவங்களும் திருந்த மாட்டாங்க, இவங்களும் திருந்த மாட்டாங்க
"ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை"னு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவிச்சிருக்காராம். இன்னும் விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துல இவங்க விட்டு கொடுக்க என்ன இருக்கு? அதை இவ்வளோ நாள் தள்ளி வச்சு நாம தான் விட்டு கொடுத்து இருக்கோம். இதை கேக்கவா கருணாநிதி இவ்வளோ நாள் இந்த திட்டத்தை தள்ளி வச்சார்? இந்த பிரச்சனையும் தீராது போல!
இதை படித்து கொண்டிருக்கும் போதே, இந்த செய்தியும் படித்தேன்:
பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்
இதை படித்த நீங்கள், இதையும் படியுங்கள்:
"பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்துள்ளார்."
இது தானா சார் உங்க டக்கு ஸாரி வாக்கு? நம்ம ஆளுங்களையும் சொல்லணும். இவங்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேற இடமே கிடைக்கலியா? நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான். மதியாதார் வாசலையே மிதியாதேனு சொல்லுவாங்க. இவங்க என்னடானா, போட்டு மிதிப்போர் வாசலையே திரும்ப திரும்ப மிதிக்கறாங்க. திருந்துங்கடா. இல்ல சத்யராஜ் அண்ணாச்சி கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.
Posted by Sathiya at 9:55 AM 2 comments
Labels: Nation, Political Views, அரசியல்
Sunday, August 12, 2007
திராவிடன்?
இது வெட்டிப்பயல் வலைப்பதிவில் வெளியானது. என் மனதிலும் இந்த சந்தேகங்கள் இருந்தன. அதற்கான அருமையான விளக்கத்தை ஒரு நண்பர் அளித்திருக்கிறார். எனவே அதை இங்கே உங்களுக்காக பதிக்கிறேன்.
(source: http://vettipaiyal.blogspot.com)
1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?
திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கையை மறைப்பவர்கள் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே திராவிடர்களல்ல.தன்மதம் தான் உயர்ந்தது என்ற மூடநம்பிக்கை கொண்டிருப்பவன் தன்மதம் சார்ந்தவன் வேறொரு மதத்தை பின்பற்றினால் ஆத்திரமடைகிறான். இந்திய மதங்களைப் பின்பற்றி இந்தியக்கடவுளை வணங்கும் திராவிடர்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களிடத்திலும் வெறுப்பு இல்லை. எனவே மதமாற்றத்தில் கூட அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் மதங்களை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்தும் ஆரியர்களுக்கு ஆத்திரம் வருகிறது.ஆரிய அடிவருடிகள் என்ன செய்கிறார்கள்? பிற மதங்களைப் பழிப்பதையே முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மதத்தின் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தத் தவறுகள் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதால் அதை மறைக்க பிற மதங்களின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?
பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார். கடவுள் சிலைகளை அவமரியாதை செய்தார்.இது ஒரு உளவியல் செயல்பாடு. பெரியாரே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை நான் நம்பவில்லை. பின்னாளில் பெரியார் ரகசியமாக கடவுள் வழிபாடு செய்தார் என்று சிலர் சொல்வதில் கூட உண்மை இருக்கலாம். பெரியாரின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் காரணமும் விளங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர் பெரியார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தார். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம். இதை சாதிக்க சில புனித நம்பிக்கைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதுதான் செருப்பு மாலை உள்ளிட்ட ஷாக் டிரீட்மென்ட். அவரது நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால் பிற இந்(திய)து தமிழர்களுக்கு கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை உணர்ந்து கொண்டால் யார் பாதிக்கப்படுவார்களோ அந்த ஆரியர்களுக்குத்தான் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது.
3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?
காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் அவர் அரசியல் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். ஆடம்பரமும் சொல்லலங்காரமும் மிக்க அரசியல் சூழல் வளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ளாமல் அவர் உண்மையான மக்கள் சேவை மட்டும் போதும் என்று நினைத்ததால் தோல்விகண்டார்.
திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.
Posted by Sathiya at 12:41 AM 0 comments
Labels: Political Views
