ஆந்திராவில் நடந்த தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 294 தொகுதிகளில் வெறும் 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.
இவர் தோல்வியை இவரது ரசிகர்களே பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி உள்ளனர். ஏனென்றால் இவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கு முன்பே சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு மூன்று முதல் ஐந்து கோடி வரை வாங்கி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒவ்வொரு தோற்றுப்போன கட்சியும் கண்ணா பின்னாவென்று யோசித்து கொண்டிருக்க, இவர் மட்டும் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார்.
அவர் தோல்விக்கான காரணம் பற்றி அறிய 10 வாஸ்து ஜோதிட நிபுணர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கட்சி அலுவலகம் முழுவதும் பார்வையிட வைத்திருக்கிறார். அவர்கள் சிரஞ்சீவியிடம், நீங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த வழியை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பின்புற வழியை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே வாஸ்து நிபுணர்கள் அவரிடம், முதலில் பின்புற வழியை அடைத்து விடுங்கள். நீங்கள் கட்சி அலுவலகத்தில் பின்புற வழியை பயன்படுத்தியது தான் தோல்விக்கு காரணம். இனி நீங்கள் முன்புற வழியை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்றனர். மேலும் அலுவலகத்தில் சிரஞ்சீவி அமரும் திசைகளையும் மாற்றினர். மேலும் அவரைப்பார்க்க வரும் தொண்டர்கள் காத்திருக்கும் அறையிலும் சிறிது மாற்றம் செய்தனர். பின்னர் வாஸ்து நிபுணர்கள் சிரஞ்சீவி அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டை சரி செய்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளனர். அடப்பாவீங்களா!
நல்ல வேளை ஆந்திரால ஒரு கண்ணகி சிலை இல்லை. இருந்திருந்தா இன்னொரு புது பிரச்சனை வந்திருக்கும் போல! எதற்கும் கையை நீட்டிட்டு நிக்கிற மாதிரி ஏதாச்சும் என்.டி.ஆர். சிலை இருக்கானு பாருங்க. என்ன இருந்தாலும் நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதை கவனிக்கவும். உங்க அலுவலகத்தில் கூட வாஸ்து பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அட உங்க அலுவலகத்தை தான் பாதி இடிச்சிபுட்டாங்களே...ஒரு வேளை அது தான் காரணமோ? நல்லா பிளான் பண்ணி தான்யா செஞ்சிருக்காய்ங்க!
Thursday, May 21, 2009
நடிகர் சிரஞ்சீவி தேர்தலில் தோற்றது ஏன்?
Posted by Sathiya at 10:21 PM 3 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம்
Thursday, July 24, 2008
சிங் இஸ் கிங்
இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.
சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.
அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.
மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.
**********
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.
இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?
**********
இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.
**********
இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.
**********
இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?
**********
இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?
**********
அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.
Posted by Sathiya at 10:17 PM 9 comments
Labels: Nation, Political Views, அரசியல், நாட்டு நடப்பு
Saturday, July 5, 2008
அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்
அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.
இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.
அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?
Posted by Sathiya at 12:48 AM 10 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம், நாட்டு நடப்பு
Friday, July 4, 2008
ஆஹா! இவர்களும் பெண்கள் தானா?

(Picture Courtesy: Daily Thanthi)
விஷ்வ ஹிந்து பரிஷத் நேற்று நடத்திய பந்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இந்த படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது, அந்த வாகனத்தில் உள்ளவருக்கும் பந்த்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று. அவர் போது மக்களில் ஒருவர். அவரை போட்டு அடிப்பதாலும், கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பதாலும் இவர்கள் நடத்தும் பந்த் வெற்றி அடைந்து விடுமா?
இப்படி பட்ட காரியங்களினால் மக்களிடத்தில் அவர்கள் மதிப்பு இறங்கிவிடுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்காது. சரி தானே? இவர்கள் கடையை அடைக்க சொன்னதால் ஒரு கடைக்காரர் தீக்குளித்து வேறு இருக்கிறார்.
பெண்களே இப்படி வன்முறையில் ஈடுபட்டால், அப்பப்பா! நம்ம நாட்டை நினைச்சா பயமா இருக்குதுங்க!
Posted by Sathiya at 7:10 PM 12 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம், நாட்டு நடப்பு, நிகழ்வுகள்
Tuesday, July 1, 2008
அரசியல் பயிற்சி பள்ளி
சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?
அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.
இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:
1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.
3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.
4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.
சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.
1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.
2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.
3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!
4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)
5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!
6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.
7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.
8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).
9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.
10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.
11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.
12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.
இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!
Posted by Sathiya at 1:54 PM 8 comments
Labels: Comedy, Nation, Political Views, அரசியல், நகைச்சுவை
Tuesday, June 3, 2008
அவங்களும் திருந்த மாட்டாங்க, இவங்களும் திருந்த மாட்டாங்க
"ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை"னு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவிச்சிருக்காராம். இன்னும் விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துல இவங்க விட்டு கொடுக்க என்ன இருக்கு? அதை இவ்வளோ நாள் தள்ளி வச்சு நாம தான் விட்டு கொடுத்து இருக்கோம். இதை கேக்கவா கருணாநிதி இவ்வளோ நாள் இந்த திட்டத்தை தள்ளி வச்சார்? இந்த பிரச்சனையும் தீராது போல!
இதை படித்து கொண்டிருக்கும் போதே, இந்த செய்தியும் படித்தேன்:
பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்
இதை படித்த நீங்கள், இதையும் படியுங்கள்:
"பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்துள்ளார்."
இது தானா சார் உங்க டக்கு ஸாரி வாக்கு? நம்ம ஆளுங்களையும் சொல்லணும். இவங்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேற இடமே கிடைக்கலியா? நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான். மதியாதார் வாசலையே மிதியாதேனு சொல்லுவாங்க. இவங்க என்னடானா, போட்டு மிதிப்போர் வாசலையே திரும்ப திரும்ப மிதிக்கறாங்க. திருந்துங்கடா. இல்ல சத்யராஜ் அண்ணாச்சி கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.
Posted by Sathiya at 9:55 AM 2 comments
Labels: Nation, Political Views, அரசியல்
Thursday, April 17, 2008
விஜயகாந்த் ஐந்து வேடங்களில் கலக்கும்...

என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தார். பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு இங்க போட்டுட்டேன்.
நம்ம ஆளுங்களுக்கு கற்பனை குதிரை கன்னா பின்னானு பறக்குது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு. நல்ல வேலை நம்ம கருப்பு எம்.ஜி.ஆர்(அப்படிதான் சொல்லிக்கறாங்க) இதில் போட்டுருக்குற வேடங்களுக்கு சொந்தகாரங்க இப்போ உசுரோட இல்லை. இருந்து இதை பார்த்திருந்தாங்கனா தேவை இல்லாத கொலை பழி கேப்டனுக்கு வந்திருக்கும்.
இந்த போஸ்டரை செஞ்சவங்க உண்மையிலேயே இவர் கட்சி தானா? பின்ன எதுக்கு இவர வச்சு இப்படி காமெடி பண்றாங்க?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இப்பவே கண்ண கட்டுதே! டமிலன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!
Posted by Sathiya at 10:54 AM 9 comments
Tuesday, April 15, 2008
கிரீமி லேயர் தேவையா?
27% இடஒதுக்கீடு சட்டத்தில் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அளவு கோலை அடியோடு நீக்க வேண்டும் என்று ராமதாஸ், திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா போன்றோர் கூறியுள்ளனர்.
என்ன இது புது பிரச்சனை? அட இது புது பிரச்சனை இல்லைங்க. ரொம்ப நாளாவே இருக்கு. இந்த 'கிரீமி லேயர்' என்பது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்ன சமூக நீதி இதனால் பாதிக்கப் படும்? என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த மாதிரி ஒரு நாலு வார்த்தை (சமூக நீதி, இந்திய இறையாண்மை, சட்ட விரோதம்) வச்சுக்கிட்டு அதை கூட சேர்த்து ஒரு அறிக்கை விட்டுடறாங்க. அதனால என்ன பிரச்சனை, எப்படி பாதிப்பு ஏற்படும் அப்படீன்னு விவரமா சொன்னா தானே புரியும்.
கிரீமி லேயர் என்பது பொருளாதார அளவு கோல். அதாவது ஒருவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்திருந்தால் அவர்கள் கிரீமி லேயர் எனப்படும் வட்டத்துக்குள் அடங்குவர். இவர்களால் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இடம் பெற முடியாது. பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை பெற முடியாது. (Creamy Layer definition by Government of India: The Government of India has evolved the criteria for exclusion of certain socially advanced persons/sections from the benefits of reservation available to OBCs in civil posts and services under the Government of India and this is called the "Creamy Layer criteria".)
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் என்னை பொறுத்த வரை இந்த கிரீமி லேயர் என்கிற அளவு கோலும் வரவேற்கத்தக்கது தான். இந்த இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் முன்னேற வேண்டும், சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும், ஏற்ற தாழ்வு மறைய வேண்டும் என்பதற்காகவே வகுக்கப்பட்டது. சமூகத்தில் ஏற்கனவே இந்த அந்தஸ்தை பெற்றவர்களுக்கு எதற்கு இந்த இட ஒதுக்கீடு? ஆக மொத்தத்தில் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்த கிரீமி லேயரில் இல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு தானே கிடைக்கபோகிறது. இது நல்லது தானே?
இந்த இட ஒதுக்கீட்டை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். காசு கொடுத்தா நமக்கு நம்முடைய மரண சான்றிதழே கிடைக்கும். இப்படி இருக்கும் போது இந்த கிரீமி லேயர் சட்டம் இது போல போலி ஜாதி சான்றிதழ் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களை ஓரளவுக்கு தவிர்க்கும் என்பதே என்னுடைய கருத்து.
இதை காரணம் காட்டி தான் வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பை இழந்த முன்னேற்றிய வகுப்பில் உள்ள பலரை பார்த்திருக்கிறேன். அவர்களால் தனியார் கல்லூரியில் படிக்க வசதி இல்லாமல் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஆனால் ஏனோ தானோவென்று படித்து விட்டு மிக குறைவாக மதிப்பெண்கள் பெற்றும் அதே அரசு கல்லூரியில் மிக எளிதாக இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்து விடுவார்கள் பலர். இதை பார்க்கும் பொழுது முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு கோவம் வருவது நியாயம்தான். அதற்கான பதில் தான் இந்த கிரீமி லேயர் என்பது என் கருத்து. இதுக்கு அப்புறமும் அவர்கள் எதிர்த்தால் அது நியாயம் இல்லை.
பிற்படுத்தப்பட்டவர்கள் படும் பாடும் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களுக்கு இந்த படிப்பு தான் உயர்வையும், மதிப்பையும் தரும். சிறு வயதில் என் நண்பனின் வீட்டில் நான் உக்கார்ந்த இடத்தை கழுவ சொன்ன என் நண்பனின் பாட்டியை கண்டு மனம் நொந்த அனுபவத்தை நான் இன்னும் மறக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் கிடையாது. எனக்கே இப்படி என்றால் அவர்கள் படும் பாடு எப்படி என்பதை நினைத்தாலே பாவமாக இருக்கும். இன்றைய இளைய தலைமுறையினரால் அந்த நிலைமை மாறி வருகிறது என்பது உண்மை.
Posted by Sathiya at 1:44 PM 3 comments
Labels: அரசியல்
Thursday, April 10, 2008
இவங்கள வச்சு வேற என்ன பண்ண முடியும்?
முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?
முதல் நபர்: என்னங்க ஆச்சரியமா இருக்கு? திடீல்னு எதுக்கு கன்னட திரைப்பட துறையினர் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி தர்ணா போராட்டம் அறிவிச்சி இருக்காங்க.
இரண்டாம் நபர்: இதுவும் ஏட்டிக்கு போட்டி தாங்க. இவங்கள நல்லா புரிஞ்சி வச்சு இருக்குற தமிழ் நடிகர்கள் சங்கம், ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி உண்ணா விரதம் இருக்க போறதா சும்மா ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. அதான்.
இது ஒரு வித்யாசமான சந்திப்பு என்று சொல்ல மாட்டேன். மிகவும் அதிகமா பேசி திட்டு வங்கறதும் சுலபம், குறைவாக பேசி திட்டு வங்கறதும் சுலபம். இங்கு பேசியவர்கள் எல்லாரும் உணர்ச்சி இல்லாமல் பேசினார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்க பட்டதுக்கு என் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா பாராட்ட வேண்டாமா?
இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க....விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன குஷின்னு சொன்னா, ஒரு தேசிய கட்சி, மிக பெரிய தேசிய கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர், இப்ப வந்து இந்த விஷயத்தை ரிப்பன் கட் பண்ணாம ஆரம்பித்து வைத்திருக்கிறார். என்ன பெருந்தன்மை பாருங்க.
சரி, இப்போ பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். ஒரு பெரிய தலைவர் வந்து இதை ஆதரிக்கிறார். எதுக்கு? நம்ம நல்லதுக்கு தான். அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க. அவங்களும் இந்த மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டாம்?
கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன தியாகம் இது. மக்கள் என்ன புத்திசாலிகளா? அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க புத்திசாலிகள் அல்ல...
அரசியல்வாதிகளே பொய்ப் பேசுங்க. உடான்ஸ் விடுங்க. சுயநினைவு இல்லாம பேசுங்க. (வாயில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்...அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.
சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போடாம மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.
நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக நல்லது செய்யாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.
இதை மீண்டும் மீண்டும் வளர விடுங்கள், காவிரி பிரச்சினை மாதிரி. அறிவோட செயல்படாதீங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது கோடலியால் வெட்டினாலும் தீராத பிரச்சனை. இதை இப்போது விட்டுவிட்டு சரியான நேரம் வரும்போது நகத்தால் கிள்ளி எரிந்து விடலாம். இப்பவே, இந்த நிமிஷமே இந்த வேலையை கைவிட வேண்டும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இருக்கு.
உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்குங்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டிடாதீங்க...
Posted by Sathiya at 8:55 AM 0 comments
Saturday, January 19, 2008
சிரிக்கப் படாது!
நாடு ரொம்ப கெட்டு கெடக்குதுங்க. நம்ம பய புள்ளைங்க வர வர எந்த விஷயத்தையுமே சீரியஸா எடுத்துக்கறதில்ல. எது சொன்னாலும் ஒரு நக்கலு, நய்யாண்டி, ஏகத்தாளம்...என்னத்த சொல்ல. நான் போன வாரம் வந்த சில செய்திய நண்பர்கள் கிட்ட சொன்னா நக்கலா சிரிக்கிறாங்க. எவ்வளவு சீரியஸான மேட்டர். சரி, நீங்களாச்சும் சிரிக்காம இந்த விஷயத்தை எல்லாம் கொஞ்சம் படிங்க. இதெல்லாம் போன வாரம் சில தலைவர்களால் விடப்பட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்டவை.
அதிமுக கட்சி தலைவி கூறியதில் இருந்து சில வரிகள்:
எப்போது அதிமுக ஆட்சி என் தலைமையில் மலரும் என்று மக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.
(அப்படியா. சொல்லவே இல்ல. எப்போ? என் காதுல விழவே இல்லையே?)
தற்போது, சில புதிய கட்சிகள் புற்றீசல்கள் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றி எல்லாம் நாம் கவலைபட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை.
(இதையும் சொல்லவே இல்ல? எங்களை பத்தி எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியுதுங்கோ!)
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 20 ஆண்டு காலம் கழித்து இன்று தான் நான் ராமாவரம் தோட்டத்திற்கு வந்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. ஆனால் அத்தகைய செய்திகள் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 1995-ம் ஆண்டு நான் முதல் அமைச்சராக இருந்த போது ஜானகி அம்மாவை சந்திப்பதற்கு இந்த இல்லத்திற்கு வந்திருந்தேன். அதன் பிறகு 1996-ம் ஆண்டில் ஜானகி அம்மையார் மறைந்து விட்டார் என்ற செய்தி கேள்விபட்டதும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நான் இங்கே வந்திருந்தேன்.
(அதான. எதுக்கு இப்படி தப்பு தாப்பா செய்தி போடறாங்களோ தெரியல. ராஸ்கோல்ஸ்! நீங்க தான் ரெகுலரா பத்து வருஷத்துக்கு ஒரு வாட்டி போயிட்டு வந்துடறீங்களே!)
சில பேர் எம்.ஜிஆர். போலவே அரசியலில் வந்துவிடலாம் என்று எண்ணி திடீர் திடீர் என்று கட்சிகளை தொடங்குகிறார்கள். இன்ஸ்டன்ட் காப்பி தயாரித்து விடலாம். இன்ஸ்டன்ட் தலைவர்களை தயாரிக்க முடியாது. இவ்வாறு முயற்சி செய்வதை பார்க்கும் போது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம் அந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுகள் நாம்தான். வேறு யாராவது நாங்கள் தான் எம்.ஜி.ஆர். வாரிசு என்று சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
(ஹா ஹா ஹா ஹா ஹா! எள்ளி நகையாடிவிட்டேன். என்ன ஒரு உவமை. நீங்க சொல்றது சரி தான். நீங்க சொல்றதுல ஒருத்தர் ஒடம்பு முழுக்க சூடு போட்ட மாதிரி தான் இருப்பார். ஆனா ரொம்ப கோவக்காரர். அநியாயம் நடக்கறத பார்த்தா பல்ல தட்டி கேப்பார். அப்படியும் ஒண்ணும் ஆகலைன்னா பேசியே சாகடிச்சிடுவார். படத்துல தாங்க.)
சிலருக்கு சில நேரங்களில் பித்தம் ஏறுவது இயற்கை. பித்தம் தலைக்கு ஏறியது தெளிய வேண்டும் என்றால் சிறிது நேரம் ஆட விடவேண்டும்.
(ஆஹா! இது வேறயா. ஆடுங்கைய்யா, ஆடுங்க)
**********************
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சொன்னதில் இருந்து சில வரிகள்:
புற்றீசல்கள் போல பெருகி வரும் கட்சிகளை கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கையில் இருந்தே அவர் பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.அவர் எம்.ஜி.ஆர். பயறை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். கருப்பு என்.ஜி.ஆர். என்று சொல்லி வருகிறார்கள். யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. நான் சிறு வயதில் இருந்தே என்.ஜி.ஆரை முன் உதாரணமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவர் வழியில் செயல்பட்டு, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதற்கு பாடுபடுவேன்.
(முதல சொன்னது பாயிண்ட். ஆனா கடைசில நீங்களும் அவர் பேரையே சொல்றீங்களே. இன்னும் எத்தனை பேருயா இது மாதிரி கெளம்பி இருக்கீங்க?)
**********************
நடராஜன் அறிக்கையில் இருந்து சில வரிகள்:
இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். நீ அரசியலை விட்டு விலகி ஹைதராபாத் ஓட இருந்ததை ஒரு காலத்தில் தடுத்த நான், இப்போது உன்னை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். ஆட்சியை தீர்மானிப்பது பெரும்பான்மையினர் என்பது கருணாநிதிக்குத் தெரியும் என்பதால் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். நீ வீட்டை விட்டே வெளியே வர மாட்டாய். நான் மக்களோடு மக்களாக இருப்பவன்.
(அட்ரா அட்ரா! சபாஷ். சரியான போட்டி! ஆனா, நான் உங்களை மக்களோடு மக்களாக பார்த்ததே இல்லையா?)
உன்னை உருவாக்கிய எம்ஜிஆரை மறந்துவிட்டு ஜெயா டிவி, ஜெயா பிளஸ் டிவிக்களை துவங்குகிறார். விரைவில் நான் எம்ஜிஆர் டிவியை துவங்குவேன். என் தலையை அடகு வைத்தாவது அதை நடத்துவேன்.
(இது பாயிண்ட். இது இவ்வளவு நாளா எனக்கு தோனவே இல்லையே! ஆமாம். நீங்களும் கெளம்பிட்டீங்களா? அவர் ஒருத்தர் பேர வச்சு இன்னும் எத்தனை பேருயா?)
Posted by Sathiya at 10:20 PM 1 comments
Labels: அரசியல்
Wednesday, August 22, 2007
அரசியல் கூத்து!
நம்ம ஊரு அரசியல்வாதீங்க எல்லாம் சேர்ந்து பேசிகிட்டா எப்படி இருக்கும்? அதுவும் தமி்ழ் சினிமாவுல வர பன்ச் டைலாக்ஸ் யூஸ் பண்ணி பேசினா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காக செய்த கற்பனை தான்.
கலைஞர்: சமீபத்துல லயோலா கல்லூரி நடத்துன கருத்து கணிப்புல எங்க தி.மு.கழகம் தான் முதல் இடத்துல இருக்கு!
ஜெயலலிதா: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்
கலைஞர்: அப்ப, நீங்க நல்லவரா கெட்டவரா? ஹா ஹா ஹா!
ஜெயலலிதா: லூசாப்பா நீ? இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி!
விஜயகாந்த்: நிறுத்துங்க! அரசியலுக்கு வந்தவுடனே பழச மறக்கறீங்க, ஜெயிசிட்டா மக்கள மறந்துட்டு இப்படி சண்டை போட்டுக்கறீங்க!
கலைஞர்: கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கே.பி. சுந்தராம்பாள் ஆர்.பி.சவுத்ரி படத்துல ஹிரோயினா நடிக்குதுனு சொல்லுவியே!
விஜயகாந்த்: அப்படீன்னா?
கலைஞர்: பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...
(ராமதாஸ் உள்ளே வருகிறார்)
ராமதாஸ்: ஷாமீ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!
விஜயகாந்த்: என்ன? நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸான்னா?
ராமதாஸ்: ஏய்ய்...வேண்டாம்! புயல் அடிச்சி கூட எழுந்துடலாம், ஆனா இந்த தாஸ் அடிச்சு எழுந்ததா சரித்திரமே இல்ல!
விஜயகாந்த்: நீ அடிச்சா பீஸு, நான் அடிச்சா மாஸு!
ராமதாஸ்: ஏய் மாஸு! உயிருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு!
விஜயகாந்த்: நான் பார்க்க தான் தூசு! சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்!
(கார்த்திக் உள்ளே வருகிறார்)
கார்த்திக்: ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!
ஜெயலலிதா: நீ எங்கே வந்த? பட்டது போதாதா?
கார்த்திக்: ஹாய் செல்லம்! அதெல்லாம் நீ ஏன் பேசர? அதெல்லாம் நீ பேச கூடாது!
கலைஞர்: அது!
கார்த்திக்: ஆமாம் விஜய், நீங்க கூட்டணி வைக்க மாட்டேன், வைக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்றீங்களே, நிஜமாகவா?
விஜயகாந்த்: துளசி கூட வாசம் மாறலாம், ஆனா இந்த விஜய்காந்த் வார்த்தை மாறமட்டான்
ஜெயலலிதா: இப்போ தான கொஞ்ச நாள் முன்னாடி வேற மாதிரி சொன்னீங்க?
விஜயகாந்த்: அது போன மாசம்! அய்ங்!
கார்த்திக்: பனம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு ஏன்யா இந்த புனிதமான அரசியல பயன் படுத்தறீங்க?விஜயகாந்த்: ஹி ஹி ஹி! கார்த்திக் நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலயே?
கலைஞர்: ஆட்சி முடியிற நாள் தெரிஞ்சிட்டா, ஆட்சி நடத்துற நாள் நரகமாயிடும். ஸுருட்டரது தாங்க முக்கியம்!
ராமதாஸ்: கார்த்திக், நீங்க எங்க கூட்டணி கட்சியில சேர்ந்துக்கறீங்களா?
கார்த்திக்: என்னது? கூட்டணியா? அய்யோ, ஆளை விடுங்க!
ராமதாஸ்: ஏன்?
கார்த்திக்: கட்சி போனா வரும், உயிர் போனா வருமாங்க?
ஜெயலலிதா ராமதாஸிடம்: நீங்க இப்ப எல்லாம் என் எதிரி கிட்ட நேர்ல பேசறத விட பத்திரிக்கை மூலமா தான் நிறைய பேசறீங்க போல?
ராமதாஸ்: அவங்க ஒரு அறிக்கை விட்டா, நாங்க நூறு அறிக்கை விடுவோம்!
ஜெயலலிதா: அப்போ எதுக்கு அந்த பக்கம் போனீங்க? இங்க வந்து இருக்கலாம்ல?
ராமதாஸ்: நீங்க விரும்புற கட்சிய விட, உங்கள விரும்பற கட்சியில சேர்ந்தா உங்க கட்சி நல்லா இருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு...
ஜெயலலிதா: சரி இப்போ வாங்க?
ராமதாஸ்: புலி பசிச்சாலும் புள்ள திண்ணாது!
(திருமா உள்ளே வருகிறார்)
திருமா: யாரு அது எங்க கட்சி பேர இழுக்கறது?
ராமதாஸ்: எவன் அவன்?
திருமா: யாரு அடிச்சா பொறி கிளம்பி பூமி் அதிர்றது ஒடம்புல தெரியுமோ அவன்....
கலைஞர்: எந்த மி்ருகத்து பேர சொன்னாலும் நான் தான் நான் தான்னு வந்துடறியே பா, அவரு சொன்னது புலி, சிறுத்தை இல்ல!
ராமதாஸ்: வாங்க திருமா!
கார்த்திக்: ஆமாம் தாஸன்னே, இப்போவெல்லாம் நீங்க இவங்களோட பழைய மாதிரி நட்பா இல்லையே?
ராமதாஸ்: அவரு சினிமாவுல நடிக்க போயிட்டாரு...அதான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன். இல்லனா அப்புறம் சினிமாவ விமர்சனம் பண்ண முடியாதுல்ல?
திருமா: அவருக்கு முன்னாடியே சினிமாவ விமர்சனம் பண்ணி, தமி்ழ காப்பாத்த போராட்டம் பண்ணவங்க நாங்க.
ராமதாஸ்: யாரு முதல்ல ஆரமி்க்கறாங்க என்பது முக்கியம் இல்ல, கடைசியா யாரு முடிக்கறாங்கன்றது தான் முக்கியம்.
கார்த்திக்: எல்லாரும் மக்களுக்கு என்ன நல்லது செய்லாம்னு யோசிச்சா, நீங்க மட்டும் தினமும் ஒரு படம் பார்த்து...அத விமர்சன பண்றதையே பொழப்பா வச்சு இருக்கீங்களே இது சரியா?
ராமதாஸ்: என் வழி தனி வழி!
கார்த்திக்: நீங்க மாறவே மாட்டீங்களா?
ராமதாஸ்: ஆண்டவன் சொல்றான், ராமதாஸ் செய்றான்!
கார்த்திக் கலைஞரிடம்: பார்த்தீங்களா? இவங்க பேச்செல்லாம் கேட்டு நீங்க உங்க பேரனையே வெளிய அனுப்பிட்டீங்களே? தப்பில்லையா?
கலைஞர்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா, எதுவுமே தப்பில்லை!
கார்த்திக்: யாரு அந்த நாலு பேரு?
(இதை கேட்டுக் கொண்டே வைகோ உள்ளே வருகிறார்)
வைகோ: வேற யாரு? அவரு, அவரோட மகன் ஸ்டாலின், பொன்னு கனிமொழி, இன்னொரு மகன் அழகிரி
கார்த்திக்: இது யாருப்பா?
வைகோ: சொல்லி அடிச்சா கில்லி, சொல்லாம அடிச்சா திருப்பாச்சி, சொல்லியும் சொல்லாம அடிச்சா சிவகாசி...அதான் இந்த வைகோ!
கலைஞர்: தோற்று விட்டு இருக்கற இடமே தெரியாம இருக்க, அப்பவும் புத்தி வரல்லையா?
வைகோ: வாழ்க்கை ஒரு வட்டம், அதுல ஜெயிக்கறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்.
கார்த்திக்: ஆமாம், ஏன் கலைஞர விட்டுட்டு திடீல்னு போயிட்டீங்க?
கலைஞர்: கிளிக்கு இறக்கை முலைச்சிடுச்சு, அதான் விட்டுட்டு பறந்து போயிடுச்சு!
வைகோ: என்னோட அரசியல் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பே இவங்களோட கூட்டணி வச்சுகிட்டதுதான்...
கார்த்திக்: ஆமா ஆமா, நீங்க ஒழுங்கா ஜெயில்ல இருந்தப்பவே தினமும் உங்க செய்தி பேப்பர்ல வரும்...இப்ப ஒன்னுத்தயும் காணோம்!
கார்த்திக் கலைஞரிடம்: இவரு மனசு மாறி வந்தா, உங்க கட்சியில சேர்த்துக்குவீங்களா?
கலைஞர்: கதம், கதம்!
ஜெயலலிதா: ஹா ஹா ஹா! என்ன விட்டா இப்போ வேற கதி இல்ல அவருக்கு!
கார்த்திக்: நீங்க ஏன், கலைஞர் பேர கேட்டாலே கோவப்படறீங்க? தமி்ழ் நாட்ட தவிர மத்த ஊர்ல எல்லாம், ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இப்படியா இருக்காங்க?
ஜெயலலிதா: கலைஞர், தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த!
கலைஞர்: அதிகமா ஆச படற ஆம்பலையும், அளவுக்கு மீறி கோவப்படற பொம்பலையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!
கார்த்திக்: சும்மா அதிருதில்ல!
ஜெயலலிதா: ரொம்ப பேசாதீங்க! இன்னைக்கு தோற்றா, நாளைக்கு பால்...சாரி ஆப்பு!
கார்த்திக்: ஆமா ப்ரெசிடென்ட் எலக்ஷன்ல எல்லாரயும் ஓட்டு போட சொல்லிட்டு நீங்க மட்டும் ஏன் போடல?
ஜெயலலிதா: நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!
விஜயகாந்த்: அவங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கலைஞர்: என்ன கொடும சேர் இது? இந்த மாதிரி கத்து குட்டிங்களோட அரசியல் பண்றது என் தலை எழுத்து!
விஜயகாந்த்: பிள்ளையாரே பெருச்சாலில போறாராம், பூசாரிக்கு புள்ளட் கேட்குதாம்!
ஜெயலலிதா: ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம உலர்றீங்க? தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கீங்களா?
விஜயகாந்த்: வீனா என் வம்புக்கு வராதீங்க. நான் பிரச்சனை பன்னா தாங்க மாட்டீங்க.
ஜெயலலிதா: நாங்க எல்லாம் பிரச்சனையே பெட்சீட்டா போட்டு படுக்கறவங்க!
கார்த்திக்: விஜய், நீங்க உங்க வரவு செலவு எல்லாம் கணக்கே வச்சுக்கறது இல்லையாமே?
விஜயகாந்த்: கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்!
கார்த்திக்: அடங்கப்பா! நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா?
விஜயகாந்த்: நான் கேட்டதயும் சொல்லுவேன், கேக்காததயும் சொல்லுவேன்! நான் என்ன சொல்வேன், எப்படி சொல்வேனு யாருக்கும் தெரியாது. ஆனா சொல்ல வேண்டிய நேரத்துல...
கார்த்திக்: கரெக்டா சொதப்புவீங்க!
விஜயகாந்த்: என்னையே கலாய்க்காதீங்க...பாருங்க ராம்தாஸ் சும்மா தான் இருக்காரு!
ராமதாஸ்: என்ன ஏன் இதுல இழுக்கறீங்க? நீங்க அடங்கவே மாட்டீங்களா?
விஜயகாந்த்: நான் அடங்கிப் போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!
கார்த்திக்: அய்யயோ! அதெல்லாம் வேண்டாம்...பாத்ரூம் ப்ரீயாதான் இருக்கு...உடனே போங்க!
விஜயகாந்த் வெளியே போகிறார். இதான் சாக்குனு அனைவரும் எஸ்கேப் ஆகிறார்கள்!
Posted by Sathiya at 11:38 AM 3 comments
